புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் கடந்த 10-ம் தேதி ஓய்வு பெற்றார். முன்னதாக, அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுதுணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துவழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது, தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்தது போன்ற முக்கிய தீர்ப்புகள் வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் சஞ்சீவ் கன்னா இருந்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் இருந்த ஆம் ஆத்மி தலைவர்கேஜ்ரிவாலுக்கு, சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வுதான் முதன்முதலில் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
டெல்லியில் கடந்த 1960 மே 14-ம் தேதி பிறந்த சஞ்சீவ் கன்னா, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். 1983-ல் டெல்லி பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார். 2005-ல் டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல்நீதிபதியாகவும், 2006-ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ஜனவரி 18-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
பதவிக் காலம் 6 மாதம்: சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் 2025 மே 13-ம் தேதி முடிவடையும் நிலையில், 6 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக அவர் பதவி வகிப்பார்.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்பட்டு வரும் பல்வேறு முக்கிய வழக்குகள் இனிமேல் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் வரம்புக்குள் வரும். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கான சிறுபான்மை அந்தஸ்து குறித்து மறு மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்காக3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வைசஞ்சீவ் கன்னா நியமிக்க உள்ளார்.
கணவனால் மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் அதை குற்றமாக கருதவேண்டுமா என்பது தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கவும் புதிய அமர்வு நியமிக்கப்பட வேண்டியுள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் தாத்தா சரவ் தயாள். புகழ்பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தவர். சுதந்திரபோராட்ட வீரரும்கூட. இவர், பழம்பெரும் நீதிபதி எச்.ஆர்.கன்னாவின்தந்தை ஆவார். 1919 ஜாலியன்வாலா பாக் போராட்டத்துக்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டியில் இடம்பெற்றிருந்தார். அந்த காலத்தில் ஜாலியன்வாலா பாக் அருகே கத்ரா ஷெர் சிங்பகுதி மற்றும் இமாச்சல பிரதேச மாநிலம்டல்ஹவுசியில் சரவ் தயாள் 2 வீடுகளை வாங்கியுள்ளார். 1947-ல் நாடு சுதந்திரம் பெற்றபோது, கத்ரா ஷெர் சிங்கில் உள்ள அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. சரவ் தயாள் மறைந்த பிறகு, அந்த வீடு 1970-ல் விற்கப்பட்டது. தலைமை நீதிபதி கன்னா இன்றுவரை அந்த வீட்டை நன்கு நினைவில் வைத்துள்ளார். அமிர்தசரஸ் செல்லும் போதெல்லாம், கத்ரா ஷேர் சிங் சென்று அந்த வீட்டை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.