ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையில் அந்த வனப்பகுதிக்கு மலையேற்றம் சென்ற இருவர் என்கவுன்ட்டர் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். பாறைகளில் பதுங்கிக்கொண்ட இருவரும் 100-க்கு டயல் செய்துதங்கள் இருப்பிடம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தங்கள் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பிறகு மலையேற்ற வீரர்கள் இருவரும் மீட்கப்பட்டு, அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “அங்கு சிக்கிய இருவரில் ஒருவருக்கு அதிர்ஷ்டவசமாக 100-க்கு டயல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புக் குழு அவர்களை மீட்டது.
உதவி தேவைப்படும் எந்த சூழலை எதிர்கொண்டாலும் 100 உள்ளிட்ட ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்ளுமாறு உள்ளூர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள், மலையேற்ற வீரர்கள் என அனைவரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். மலையேற்றம் மற்றும் சாகச பயணம் செல்வோர் தங்கள் திட்டம் குறித்து கட்டாயம் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் இருந்து தப்பிய தீவிரவாதிகளை தேடும் பணி ஜபர்வான் வனப் பகுதியில் தொடர்கிறது.