புதுடெல்லி: காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசு அபாய அளவை எட்டிஉள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை. பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கப்பட்டால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும்.
பட்டாசு தடையை டெல்லி போலீஸார் முறையாக அமல்படுத்தவில்லை. தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று டெல்லி அரசு கடந்த அக். 14-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அப்போதே டெல்லி போலீஸார் பட்டாசு விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டாசு விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதை தடுக்க சிறப்பு பிரிவை டெல்லி போலீஸ் கமிஷனர் ஏற்படுத்த வேண்டும். இந்த சிறப்பு பிரிவு போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும்.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்துடெல்லி அரசு வரும் 25-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும். பட்டாசு தடையை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் வரும் 25-ம் தேதிக்குள் விரிவான பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
பட்டாசு தடை தொடர்பாக டெல்லியின் அண்டை மாநிலங்கள் வரும் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.