சென்னை: சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசர கால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.12) காலை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், “சென்னையில் நேற்றிரவு தொடங்கி மழை பெய்தாலும் எந்தப் பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை. இனிமேல் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஆய்வுக்குப் பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சர் உத்தரவின்படி கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தோம். மழை நீரை அகற்ற 1499 மோட்டார் பம்புகள், 150 நீர் உறிஞ்சும் இயந்திரம் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் மாதம் பெய்த மழைக்கான பணியை காட்டிலும் தற்போதைய மழைக்கு பணியை அதிகமாக்கி உள்ளோம். கூடுதல் மோட்டார்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
சென்னை மாநகராட்சி சார்பில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயாராக உள்ளன. சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டுமே மூடப்பட்டுள்ளது. அதுவும் ரயில்வே மேம்பால பணிக்காக மூடப்பட்டுள்ளது. கடந்த முறையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இந்த முறையும் மண்டல அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.மழைநீரைப் பொறுத்து கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பெரியளவில் மழை பதிவாகவில்லை. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்யப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர்க் கால்வாய்களில் தூர்வாரும் பணி சீக்கிரம் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் – தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூரில் இன்று மதியம் 1 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.