ஜார்க்கண்ட்டில் நாளை முதல்கட்ட வாக்குப் பதிவு – ஏற்பாடுகள் தீவிரம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. ராஞ்சி, கோதர்மா, பர்கதா, போட்கா, ஜாம்ஷெட்பூர் கிழக்கு, ஜாம்ஷெட்பூர் மேற்கு, ஹாடியா, சீசாய், கும்லா, கார்வா உள்ளிட்ட 43 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், 17 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகவும், 20 தொகுதிகள் எஸ்டி தொகுதிகளாகவும், 6 தொகுதிகள் எஸ்சி தொகுதிகளாகவும் உள்ளன.

இந்த தேர்தலில், 73 பெண் வேட்பாளர்கள் உள்பட 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் செராய்கெல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான பன்னா குப்தா ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடா, ஜகனாத்பூர் தொகுதியில் களம் காண்கிறார். ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பி மஹூவா மாஜி போட்டியிடுகிறார்.

தேர்தலை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அலுவலர் உட்கர்ஷ் குமார், நாளை காலை 5.30 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து உண்மையான வாக்குப் பதிவு தொடங்கும். வாக்குச்சாடிகளில் குடிநீர், கழிப்பிடம், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிஏபிஎஃப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். மற்ற பகுதிகளில் மாவட்ட காவலர்கள் நிறுத்தப்படுகிறார்கள். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ள இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதியோடு முடிவடைகிறது. கடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.