இலங்கை கடற்படை அட்டூழியம்…
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஜூலை மாதம் வரை 3288 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களுக்கு சொந்தமான 558 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சமீப காலமாக சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் செலுத்தும்படி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது. இதனால் சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையாக முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்றது. இந்த வேதனை மறைவதற்குள் நேற்று மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை அவர்களது இரண்டு படகுகளையும் பிடித்துச் சென்றது.
மத்திய அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தல்..
இதையடுத்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் தீவில் உள்ள மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
மீனவர் சங்க தலைவர்கள் சேசு, எமரிட், சகாயம், பேட்ரிக், எஸ்.பி.ராயப்பன் உள்ளிட்டோர் தலைமையில் பாலத்தில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கை குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை
சாலை மறியலால் மண்டபம் மற்றும் பாம்பன் இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் மீனவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாம்பன் சாலை பாலம் வாகன போக்குவரத்திற்கு வழியின்றி முற்றிலுமாக முடங்கி போனது. இதையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீனவர் சங்க தலைவர்கள், அடுத்த 15 நாள்களுக்குள் பிரதமரை சந்தித்து மீனவர்கள் முறையிட வழிவகை செய்து தர வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.
இதையடுத்து மீனவர் சங்க தலைவர்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து கலைந்து செல்ல முயன்றனர். ஆனால் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.
கடலில் மூழ்க முயன்ற பெண்கள்…
இதனை தொடர்ந்து போலீஸார் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ பெண் ஒருவர் சாலையில் மயங்கி சரிந்தார். உடனடியாக அங்கு வந்த எஸ்.பி சந்தீஷ் உள்ளிட்ட போலீஸார், அப்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனிடையே போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பெண்களில் சிலர் அருகில் உள்ள பாம்பன் வடக்கு கடலில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக கூறியபடி கடலை நோக்கி ஓடினர். இதனால் அங்கு திடீர் பதற்றம் உருவானது. இதனை கண்ட போலீஸார், கடலில் இறங்க ஓடிய பெண்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை.
மீனவர்களின் போராட்டத்தினால் சுமார் 2 மணி நேரம் முடங்கிய சாலை போக்குவரத்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினாலும், மீனவ பெண்களின் திடீர் முடிவால் பாம்பன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88