பாராளுமன்றத் தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

2024 பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

இம்முறை தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவசியமாயின் சேவையில் ஈடுபடுத்துவதற்காக காத்திருப்பில் உள்ளனர்.

இது தவிர, தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் அவசியமான இடங்களுக்கான பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 11,000 இற்கும் அதிகமானவர்கள் நடமாடும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விபரித்தார்.

அதன்படி, சுமார் 85,000 இற்கும் அதிகமானவர்கள் பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்பிற்காக  இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தினத்தன்று உத்தியோகபூர்வ அனுமதியின்றி வாக்காளர்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும், அவ்வாறான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வாக்கு மத்திய நிலையம் அல்லது வாக்குச் சாவடிகள் போன்றவற்றின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.