ஜல்னா,
மராட்டியத்தின் ஜல்னா மாவட்டத்தில் சிவசேனா வேட்பாளர் அர்ஜுன் கோத்கருக்கு, முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவரான ராவ் சாகிப் தன்வே, சால்வை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தபோது, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க தயாரானார்.
அப்போது, அருகே நின்ற கட்சி தொண்டர் ஒருவரை நகர்ந்து செல்லும்படி கூறுவதற்கு பதிலாக, வலது காலால் எட்டி உதைத்துள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்று வெளிவந்து வைரலானது. இதனை தொடர்ந்து, ஆளும் மகாயுதி அரசை, எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கடுமையாக விமர்சித்து உள்ளது.
அந்த வீடியோவில் இருக்கும் தொண்டர் ஷேக் அமத் என அடையாளம் காணப்பட்டது. ஆனால் அவர் கூறும்போது, இது தவறுதலான புரிதல். தன்வேவை, சட்டையை சரியாக போடும்படி கூறினேன். அவர் காலால் உதைத்தது நண்பர்களுக்கு இடையே விளையாட்டாக செய்த விசயம் என விளக்கம் அளித்துள்ளார்.
நாங்கள் 30 ஆண்டு கால நண்பர்கள். தேர்தல் நேரம் இது. அதனால், அவரை இலக்காக கொண்டு எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க கோருகின்றன என்று தன்வேவை பாதுகாக்கும் வகையில் பேசினார்.