சென்னை: மாணவிகளுக்கு பாலி்யல் தொல்லை அளித்த வழக்கில் கே.கே.நகர் தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன், வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது, மாணவிகளின் உடல் அமைப்பு மற்றும் அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது, ஆன்லைனில் அநாகரீகமாக நடந்து கொள்வது என பல்வேறு வழிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 8 மாணவிகள் அவருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தனர். அதையடுத்து, வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீதான குண்டர் தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக 8 மாணவிகள் பாலியல் ரீதியாக புகார் அளித்துள்ளதால் தலா 2 ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன். இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அதாவது 2 ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.80 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும், என தீர்ப்பளித்துள்ளார்.