மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஃபைசல் கான் என்பவரை சத்தீஸ்கரின் ராய்பூரில் மும்பை போலீசார் கைது செய்தனர்.
மும்பையின் பந்த்ரா காவல் நிலையத்துக்கு கடந்த 7-ம் தேதி தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், மும்பையில் ஷாருக்கானின் இல்லத்துக்கு வெளியே தான் இருப்பதாகவும், தனக்கு ரூ.50 லட்சம் தராவிட்டால் அவரை கொலை செய்யப்போவதாகவும் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மும்பை போலீஸார், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மிரட்டல் அழைப்பு, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து, ஃபைசல் கான் என்ற நபரின் தொலைபேசி எண்ணில் இருந்து வந்ததை கண்டறிந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ராய்ப்பூர் விரைந்த மும்பை போலீஸார், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஃபைசல் கானை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
வழக்கறிஞரான பைசல் கான், ஷாருக்கானுக்கு தான் மிரட்டல் விடுக்கவில்லை என்றும் தனது கைப்பேசி கடந்த 2ம் தேதி திருடப்பட்டதாகவும் கூறினார். தனது தொலைபேசியில் இருந்து மிரட்டல் விடுத்தது, தனக்கு எதிரான ஒரு பெரிய சதி என்றும் அவர் கூறி இருக்கிறார். தனது தொலைபேசி திருடப்பட்டதை அடுத்து காவல்துறையில் தான் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1994ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் அஞ்சாம் திரைப்படத்தில் மான் வேட்டை குறித்த ஒரு உரையாடல் இருப்பது குறித்து மும்பை போலீஸாரிடம் ஃபைசல் கான் கவலை தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது இந்த பின்னணியை கருத்தில் கொண்டு அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் கைது செய்துள்ளனர்.
அக்.30-ம் தேதி இதேபோன்ற ஒரு கொலை மிரட்டல் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்கப்பட்டது. நடிகர் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகனும் என்சிபி எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் முகம்மது தைய்யப் அல்லது குர்ஃபான் கான் என்பது தெரியவந்துள்ளது. அவர் நொய்டாவின் செக்டார் 39ல் கைது செய்யப்பட்டார்.