14 ஆண்டுகளுக்கு முன்பு உதவிய மத்திய பிரதேச காய்கறி வியாபாரிக்கு டிஎஸ்பி பாராட்டு

மத்தியப் பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் உதவிய காய்கறி வியாபாரியை, நடுரோட்டில் அடையாளம் கண்ட டிஎஸ்பி ஒருவர் அவரை கட்டியணைத்து நட்பு பாராட்டினார்.

மத்தியப் பிரதேசம் போபால் நகரில் டிஎஸ்டியாக பணியாற்றுபவர் சந்தோஷ் படேல். இவர் கடந்த சனிக்கிழமை தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் சென்ற நபருக்கு உதட்டில் தழும்பு ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும், தான் பொறியியல் கல்லூரி படிக்கும் போது பழகிய காய்கறி வியாபாரி சல்மான் கான் என்பவரின் நினைவு வந்தது. உதட்டு தழும்பை வைத்து அவர் சல்மான் கான் என்பதை உறுதி செய்த சந்தோஷ் படேல், தனது ஜீப்பை விட்டு இறங்கி அந்த நபரை பெயர் சொல்லி அழைத்தார்.

போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கிய நபர், தன்னை பெயர் சொல்லி அழைப்பதை, ஆச்சர்யத்துடன் பார்த்த சல்மான் கானுக்கு, 14 ஆண்டுகளுக்கு முன் தனது காய்கறி கடைக்கு வழக்கமாக வந்த நண்பர் சந்தோஷ் படேல் என்பது நினைவுக்கு வந்தது. சல்மான் கானிடம், தன்னை ஞாபகம் இருக்கிறதா? என சந்தோஷ் படேல் கேட்க, அவர் சல்யூட் அடித்தபடி நன்றாக ஞாபகம் இருக்கிறது சார் எனக் கூற இருவரும் ரோட்டிலேயே கட்டிபிடித்து நட்பு பாராட்டிக் கொண்டனர்.

அவருடன் இருக்கும் போட்டோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட டிஎஸ்பி சந்தோஷ் படேல், ‘‘நான் போபாலில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தபோது சல்மான் கான் என்ற காய்கறி வியாபாரியுடன் நட்பு ஏற்பட்டது. நான் ஏழ்மையில் இருந்தபோது, இவர் எனக்காக தனது கடையில் இருக்கும் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை எடுத்து வைத்து இலவசமாக தருவார். அதை நான் சமைத்து சாப்பிடுவேன். அவருக்கு நன்றி’’ என குறிப்பிட்டிருந்தார். இவர்களது நட்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.