வெலிங்டன்: சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்கள், மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக சுமார் 2 லட்சம் பேருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமான, வரலாற்றுபூர்வமான மன்னிப்பு கோரினார்.
நியூசிலாந்தில் சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்களில் ஏராளமான சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தேவாலயங்களில் இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தாய்மார்களிடம் இருந்து குழந்தைகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு தத்து கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்களின் உண்மைத் தன்மை குறித்த 6 ஆண்டு கால பொது விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன. அவற்றை, நினைத்துப் பார்க்க முடியாத தேசிய பேரழிவு என்று நியூசிலாந்து அரசு குறிப்பிட்டுள்ளது. 1950-களில் இருந்து 70 ஆண்டுகளில் சுமார் 2,00,000 பேர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க 233 பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்து. அதன் அடிப்படையில், கடந்த 70 ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த தேசிய பேரழிவுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நாடாளுமன்றத்தில் இன்று பகிரங்க மன்னிப்பு கோரப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஏராளமானோர் வருகை தந்ததால் நாடாளுமன்ற கேலரி நிரம்பி வழிந்தது.
கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டதற்காக அனைத்து அரசுகள் சார்பிலும் பகிரங்கமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மன்னிப்பை கோருவதாக பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார். “உங்களுக்கு நேர்ந்த துஷ்பிரயோகங்கள் குறித்து புகாரளிக்க நீங்கள் முன்வந்தபோது உங்களை அரசு நிர்வாகம் நம்பவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.
இவ்வளவு காலத்துகுப் பிறகு மன்னிப்பு கோரும் என் வார்த்தைகள் சிறியதாகவும், மிகவும் புண்படுத்தப்படுவதாகவும் உங்களில் சிலர் உணரலாம். ஆனால், இந்த மன்னிப்பு கோருதல் மூலமாகவும், நீங்கள் பட்ட வேதனையை ஒப்புக்கொள்வதன் மூலமாகவும் உங்களில் சிலருக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கலாம். துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தேவாலயங்கள் இனி சரியானதைச் செய்யும் என்றும், தாங்கள் செய்த தவறுக்கான பரிகாரச் செயல்பாட்டில் பங்கேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.
பிரதமர் லக்சன் மன்னிப்பு வேண்டி இவ்வாறு பேசியதைக் கேட்ட பாதிக்கப்பட்டவர்கள் தேம்பி தேம்பி அழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். நியூசிலாந்தின் லேக் ஆலிஸ் மனநல மருத்துவமனையில், நோயாளிகளுக்கு கருத்தடை செய்யப்பட்டதையும், நெறிமுறையற்ற மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டதையும், மின்சாரம் பாய்ச்சி தண்டிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த பிரதமர் லக்சன், “அந்த மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்தார். லேக் ஆலிஸ் மருத்துவமனையில் கற்பனை செய்ய முடியாத வலிக்கு ஆளானவர்களுக்காக நான் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பேசும்போது, “அரசு, தேவாலயம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான நிறுவனங்களால் நடத்தப்படும் பல பத்தாண்டு கால துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் சித்திரவதைக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். தெரு பலகைகள் மற்றும் பிற பொது நினைவுச் சின்னங்களில் இருந்து நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்களை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.