மும்பையில் கடந்த மாதம் 12ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். மூன்று பேர் சேர்ந்து இப்படுகொலையைச் செய்தனர். அவர்களில் குர்னைல் சிங் மற்றும் தர்மராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் பிடிபட்டனர். ஆனால் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் சிவகுமார் கூட்டத்தில் தப்பிச்சென்றுவிட்டார். அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் என்ற இடத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 12) கைது செய்யப்பட்டார். அவருடன் அவருக்கு உதவிய கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மும்பை கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிவகுமாரிடம் நடத்திய விசாரணையில், “நடிகர் சல்மான் கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் கண்ணில் யார் பட்டாலும் சுட்டுவிடும்படி தன்னிடம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார். அதோடு கடவுளுக்காகவும், சமுதாயத்திற்காகவும் இக்காரியத்தைச் செய்வதாக சிவகுமாரிடம் அன்மோல் பேசி இருக்கிறார் என்று தெரிய வந்தது.
சிவகுமார் துப்பாக்கியால் சுட்டவுடன் தனது சட்டையை மாற்றிக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஆட்டோ ஒன்றில் அருகில் உள்ள குர்லா ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து புனே சென்று புனேயில் இருந்து சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். அவர் பிடிபட்டது எப்படி என்பது குறித்து இவ்வழக்கு விசாரணையில் நேரடியாக ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிவகுமார் கொலை செய்துவிட்டு ரயிலில் சென்றபோது தனது தொலைப்பேசியைத் தூக்கிப்போட்டுவிட்டார். அதன் பிறகு புனே செல்லும் போதும், அங்கிருந்து உத்தரப்பிரதேசம் செல்லும்போது தன்னுடன் பயணம் செய்யும் சக பயணிகளிடம் தொலைப்பேசியை வாங்கி தனது கூட்டாளிகளுடன் பேசியிருக்கிறார்.
லக்னோவில் இறங்கி பஹ்ரைச் என்ற இடத்திற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற இரண்டு நாட்களில் அவர் அங்கிருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர் தொலைப்பேசி பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தார். இதனால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. அங்குள்ள நான்பரா என்ற இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனப்பகுதியில் குடிசை ஒன்றில் சிவகுமார் தங்கி இருந்தார்.
அவனுக்குத் தேவையான உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை அவரது நண்பர்கள் வாங்கிக்கொடுத்தனர். நாங்கள் (காவல்துறை) பஹ்ரைச் நகரில் தங்கி இருந்து சிவகுமார் நண்பர்கள், உறவினர்கள் 50 பேரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதில் மிகவும் நெருக்கமான 10 பேரைத் தேர்வு செய்து அவர்களை மட்டும் பின்னர் கண்காணிக்க ஆரம்பித்தோம். அவர்களில் 4 பேர் சிவகுமாருடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்தோம். லக்னோவில் வாங்கிய புதிய தொலைப்பேசி மூலம் சிவகுமார் தனது நண்பர்களுடன் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். சிவகுமார் இருக்கும் இடத்தை உறுதியாகத் தெரிந்து கொண்டு மும்பையிலிருந்து, மேலும் சில காவல்துறை அதிகாரிகளை வரவழைத்தோம். அதோடு உத்தரப்பிரதேச காவல்துறையும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.
சிவகுமார் நண்பர்கள் சிலர் அங்குள்ள துணிக்கடையில் பல்வேறு அளவுகளில் உடைகள் வாங்கினர். அந்த அளவு சிவகுமாருக்கு ஏற்றதாக இருந்தது. உடனே அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் தப்பிச்செல்ல முடியாத வகையில் மேம்பாலம் ஒன்றில் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தோம்.
விசாரணையில் அவர்கள் சிவகுமார் எங்கு இருக்கிறார் என்ற உண்மையைத் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்ற போது சிவகுமார் இல்லை. இரவு முழுக்க அங்குக் காத்திருந்தோம். 7 மணி நேரம் காத்திருந்த பிறகு சிவகுமார் அங்கு வந்தார். அவரை அதிரடியாகக் கைது செய்தோம். அவனைக் கைது செய்ய உத்தரப்பிரதேசத்தில் 25 நாட்கள் நாங்கள் தங்கி இருந்து இக்காரியத்தை வெற்றிகரமாக முடித்தோம். சிவகுமார் நேபாளத்திற்குத் தப்பிச்செல்லத் தேவையான உடைகளை அவரது நண்பர்கள் வாங்கி வந்திருந்தனர்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs