Doctor Vikatan: நடிகை குஷ்பூ தனது சோஷியல் மீடியாவில், கேரட் துருவலோடு, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவைத்த எண்ணெய் செய்முறையைப் பகிர்ந்திருந்தார். அது ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதாகவும் சரும நிறத்தை அதிகரிப்பதாகவும் சொல்லியிருந்தார். இப்படிச் செய்வது உண்மையிலேயே சரும நிறத்தை அதிகரிக்குமா, இளமைத் தோற்றம் தருமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
கேரட் மற்றும் தேங்காய் எண்ணெயில் மட்டும்தான் ஆன்டிஏஜிங் தன்மைகள் உள்ளனவா என்றால் கிடையாது. கேரட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ போன்றவை அதிகம் உள்ளன. குறிப்பாக, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறி, பழங்களில் இந்தச் சத்துகள் அதிகமிருக்கும்.
வைட்டமின் ஏவுக்கு மிகப் பிரமாதமான ஆன்டிஏஜிங் தன்மை உண்டு. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, பர்ப்பிள் போன்ற அடர்நிற காய்கறி, பழங்களில் இயல்பிலேயே ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகமிருக்கும். சூழல் மாசு, ஸ்ட்ரெஸ் போன்றவற்றின் காரணமாக, சருமம் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும். அதனால் ஃப்ரீ ரேடிகல்ஸ் என்பவை உற்பத்தியாகும். இவை செல்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய மூலக்கூறுகள். இவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும், இது செல்கள் மற்றும் திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும். இதைத் தடுக்க ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் தேவை.
இதை எளிமையாகப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம் சொல்கிறேன். ஓர் அறைக்குள் குரங்கை விடுகிறோம் என வைத்துக்கொள்வோம். அது அங்குள்ள எல்லா பொருள்களையும் இழுத்துப்போட்டு துவம்சம் செய்யும். அந்தக் குரங்கை அமைதிப்படுத்தும் செயல் போன்றதுதான் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் வேலையும். சருமத்துக்கு எந்தச் சேதமும் நிகழாதபோது சருமத்தில் கொலாஜென் உற்பத்தி சிறப்பாக இருக்கும். அந்த வகையில் கேரட்டில் நிறைய வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் உள்ளன. தேங்காய் எண்ணெய்யில் எம்சிடி எனப்படும் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு (medium-chain triglycerides) உள்ளது. இது சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்தோடும் வைத்திருக்கும். சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
இந்த அடிப்படையில்தான் நடிகை குஷ்பூ கேரட் துருவல்- தேங்காய் எண்ணெய் கலவை குறித்துச் சொல்லியிருப்பார். அப்படியானால் இது மட்டுமே சரும அழகையும் பளபளப்பையும் மேம்படுத்துமா என்றால் இல்லை. சரும அழகும் ஆரோக்கியமும் நீங்கள் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை, பராமரிப்பு என பல விஷயங்களைப் பொறுத்தது. எனவே, அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.