Two Wheeler Vehicle Sales In October 2024: கடந்த அக்டோபர் பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருந்தது. தசரா, தீபாவளி என இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது எனலாம். இந்த காலகட்டத்தில் நாட்டில் வணிகம் அதிகரிக்கும், பணப்புழக்கமும் அதிகரிக்கும். பண்டிகை சமயங்களில் புது புது வாகனங்களை வாங்கும் வழக்கமும் மக்களிடம் அதிகம் இருக்கிறது. அது கடந்த அக்டோபர் மாதத்தின் இரு சக்கர வாகன விற்பனையிலும் எதிரொலித்திருக்கிறது எனலாம். ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் ஆசோஷியேஷன் (FADA) கடந்த அக்டோபர் மாதத்தின் இரு சக்கர வாகனங்களின் விற்பனை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டது போல் பண்டிகை காலங்களில் மக்கள் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்றாலும், பண்டிகை காலங்களில்தான் வாகனங்களின் விலைகளில் தள்ளுபடிகளும், ஆப்பர்களும் கிடைக்கும் எனலாம். இதுவும் அதிக விற்பனைக்கு முக்கிய காரணியாக அமைகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தை விட இந்தாண்டு அக்டோபரில் இருச்சக்கர வாகன விற்பனை அதிகரித்திருப்பது இன்னும் அடுத்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாத விற்பனைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் அடுத்தடுத்து திருமண சீசன்கள் வர இருக்கின்றன.
கடந்தாண்டு – இந்தாண்டு விற்பனை: ஒப்பீடு
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் 15 லட்சத்து 14 ஆயிரத்து 634 இருச்சக்கர வாகனங்கள் விற்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவே 2024ஆம் ஆண்டு அக்டோபரில் 20 லட்சத்து 65 ஆயிரத்து 95 இருச்சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. அதாவது, கடந்தாண்டை விட இந்தாண்டு 5 லட்சத்து 50 ஆயிரத்து 461 இருச்சக்கர வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது.
வருடாந்திர விற்பனையில் மட்டுமின்றி மாதாந்திர விற்பனையிலும் கடந்த அக்டோபர் மாத விற்பனை வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது 2024 செப்டம்பர் மாதத்தில் 12 லட்சத்து 4 ஆயிரத்து 259 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. செப்டம்பரில் இருந்து தற்போது 8 லட்சத்து 60 ஆயிரத்து 836 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதாவது 71.48% ஒரே மாதத்தில் விற்பனை அதிகமாகியிருக்கிறது.
யாரு டாப்…?
செப்டம்பரில் ஹோண்டா நிறுவம் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது அக்டோபரில் முதலிடத்தை ஹீரோ நிறுவனம் பிடித்துள்ளது. ஹோண்டா கடந்த மாதம் 3,33,927 யூனிட்களை விற்றது, அதுவே இந்த மாதத்தில் 5,54,249 யூனிட்களை விற்றிருக்கிறது. மறுபுறம் ஹீரோ நிறுவனம் கடந்த செப்டம்பரில் 2, 71,390 யூனிட்களை விற்ற நிலையில், இந்த மாதம் 5,76,532 யூனிட்களை விற்றிருக்கிறது. அதாவது 112.44% விற்பனை வளர்ச்சி கண்டிருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் அதே மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த செப்டம்பரில் 2,21,257 யூனிட்களை விற்ற டிவிஎஸ் 3,51,950 யூனிட்களை விற்றிருக்கிறது. 59.07% விற்பனையில் உயர்வு கண்டிருக்கிறது. அதே நேரத்தில் பஜாஜ் 2,30,254 யூனிட்களையும், சுசுகி 1,06,362 யூனிட்களையும், ராயல் என்பீல்ட் 95,113 யூனிட்களையும், யமஹா 68 ஆயிரத்து 153 யூனிட்களையும், ஓலா 41,651 யூனிட்களையும் விற்று முறையே 4வது முதல் 8ஆவது இடங்களை பிடித்திருக்கிறது.
மேலும் படிக்க | பாஸ்ட் சார்ஜிங் யூஸ் பண்ணறீங்களா… இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்