வாஷிங்டன்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது மந்திரிசபையில் இடம்பெறும் மந்திரிகளின் பெயர்களை அறிவித்து வருகிறார். அவ்வகையில், அமெரிக்காவின் ராணுவ மந்திரியாக முன்னாள் ராணுவ வீரரும் பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான பீட் ஹெக்சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது மந்திரிசபையில் பாதுகாப்புத்துறை செயலாளராக (ராணுவ மந்திரி) பணியாற்ற பீட் ஹெக்சேத்தை பரிந்துரை செய்துள்ளேன். பீட் தனது வாழ்நாளை ராணுவத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஒரு போர்வீரராக கழித்தார். பீட் கடினமானவர், புத்திசாலி மற்றும் ‘அமெரிக்காவே முதலில்’ என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். பீட் தலைமையில், நமது ராணுவம் மீண்டும் சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையில் காலாட்படை அதிகாரியாக பணியாற்றிய பீட் ஹெக்சேத் (வயது 44), ஈராக், ஆப்கானிஸ்தானில் பணியாற்றினார். சிறப்பான பணிக்காக அவருக்கு இரண்டு வெண்கல நட்சத்திர பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த ராணுவமாக கருதப்படும் அமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லாத பீட்ஹெக்சேத் நியமனம் செய்யப்பட்டிருப்பது, ராணுவ தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.