சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு… தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம் – கொதித்த சஞ்சுவின் தந்தை

Sanju Samson Father Remarks Latest News Updates: சஞ்சு சாம்சன் என நினைத்தாலே உடனே உங்களின் நினைவுக்கு வரக்கூடியது இந்திய அணியில் ஒரு இடத்தை தக்கவைக்க அவரின் போராட்டமாகதான் இருக்கும். திறமை இருந்தும் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது ஏன் பிசிசிஐயை நோக்கி கேள்வி கேட்காத இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாவிட்டாலும் தனித்துவமான கேப்டனாகவும், அதிரடி பேட்டராக அறியப்பட்டும் இந்திய வொயிட் பால் அணியில் சஞ்சு சாம்சனுக்கு தற்போது வரை ஒரு நிரந்தர ஸ்பாட் இல்லை எனலாம். 

அந்த வகையில், கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கு ரோஹித்தின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் ஆஸ்தான ஓப்பனர்களாக அறியப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் இல்லாததால் அபிஷேக் சர்மா உடன் ஓப்பனராக களமிறங்கும் வாய்ப்பு சஞ்சு சாம்சனை தேடி வந்தது. அதுவும் ரிஷப் பண்ட், ஜித்தேஷ் சர்மா, துருவ் ஜூரேல் உள்ளிட்ட விக்கெட் கீப்பிங் பேட்டர்களும் இல்லாததால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பும் எளிமையாக கிடைத்தது.  வழக்கம்போல் அவரும் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்ப ரசிகர்கள் மன உளச்சலுக்கு ஆளானார்கள். 

முன்னேறும் சஞ்சு சாம்சன்

ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக சதம் அடித்து கவனம் ஈர்த்தார். அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சதம் அடிக்க ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர். இதனால், தற்போது மறுமுனையில் இருக்கும் அபிஷேக் சர்மாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன் டி20இல் மட்டுமின்றி அடுத்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அப்படி சேர்க்காவிட்டால் அது மாபெரும் தவறு என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் வாய்ப்புகள் தள்ளிப்போனதற்கு இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரங்களாக அறியப்படும் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்த 4 பேர் தான் காரணம்

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சஞ்சு சாம்சன் இந்திய அணியில் ஒரு வாய்ப்பாக இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததாக கூறி தனது விரக்தியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் வங்கதேசத்திற்கு எதிராக சஞ்சு சாம்சன் சதம் அடித்தபோது, பலவீனமான பந்துவீச்சாளர்களை அடித்து சதம் அடித்ததாக விமர்சித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணாமாசாரி ஸ்ரீகாந்தையும் சஞ்சு சாம்சனின் தந்தை கடுமையாக சாடி உள்ளார். 

U sure he didn’t mentioned anyones name?  pic.twitter.com/k9VRIO3emd

— Arjun (@Arjun16149912) November 12, 2024

கேரளா சார்ந்த ஊடகம் ஒன்றுக்கு சஞ்சு சாம்சனின் தந்தை அளித்த அந்த பேட்டியில்”எனது மகனின் கிரிக்கெட் வாழ்வில் முக்கியமான 10 வருடங்களை வீணாக்கியதில் 3-4 பேரின் பங்கு இருக்கிறது. உதாரணத்திற்கு தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்த நான்கு பேரும்தான் எனது மகனின் வாழ்வில் 10 ஆண்டுகளை வீணடித்துவிட்டனர். இருந்தாலும், அவர்கள் எவ்வளவு கஷ்டங்களை கொடுத்தாலும், அதனை உள்வாங்கிக்கொண்டு பிரச்னையின் போது பலமிக்க வீரராக சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார்.

ஸ்ரீகாந்த் வறுத்தெடுத்த சஞ்சுவின் தந்தை

தமிழ்நாடு வீரர் ஒருவரின் (கிருஷ்ணாமாசாரி ஸ்ரீகாந்த்) கருத்துதான் எனக்கு மன வேதனையை தந்தது. அவர் என்ன கிரிக்கெட் விளையாடினார் என்பதே எனக்கு தெரியவில்லை. இப்போது வரை எனது மகன் குறித்து ஊக்கமளிக்கும் வகையில் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஆனால் நிறைய காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார். 

‘யாருக்கு எதிராக சஞ்சு சதம் அடித்தார்?, வங்கதேச அணிக்கு எதிராக தானே…?’ என அவர் சொல்கிறார். இவர் சிறந்த வீரர் என சில பேர் சொல்கிறார்கள் ஆனால் நான் அவர் சிறப்பாக விளையாடி பார்த்ததே இல்லை. அவரும் வங்கதேசத்திற்கு எதிராக வெறும் 26 ரன்களைதான் அடித்திருக்கிறார். சஞ்சு சாம்சன் சதம் அடித்திருக்கிறார். சச்சின், டிராவிட் போன்ற கிளாஸான வீரர். குறைந்தபட்சம் அதற்காகவாவது மதிப்பளியுங்கள்” என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  

2015ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அஜிங்கயா ரஹானேவின் தலைமையில் சஞ்சு சாம்சன் அறிமுகமானார். அதன்பின் அந்த தொடரில் தோனி கேப்டனாக வந்த பின்னர் சாம்சன் வேறு போட்டிகளிள் விளையாடவில்லை என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.