சீனா: உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 35 பேர் பலி

பீஜிங்,

சீனாவின் கவ்ங்டங் மாகாணம் குஹாய் நகரில் விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே இன்று மாலை 7.30 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) 70க்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த விளையாட்டு அரங்கம் அருகே கார் வேகமாக வந்தது. அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது கார் வேகமாக மோதியது.

இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச்சென்ற 62 வயதான பென் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்தால் சொத்து பங்கீட்டின்போது ஏற்பட்ட திருப்தியின்மை காரணமாக பென் தனது காரை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சீன விமானப்படை சார்பில் நாளை பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி குஹாய் நகரில் நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.