ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.13) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 13.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 13.04 சதவீத வாக்குகள் தேர்தலில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிம்டேகா தொகுதியில் 15.09 சதவீதமும், ராஞ்சியில் 12.06 சதவீதமும், செரைகேலா-கர்சவான் தொகுதியில் 14.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதல் கட்ட தேர்தலில் 31 தொகுதிகளில் அமைந்துள்ள 950 பூக்கள் பதற்றமானவையாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 43 தொகுதிகளில் 638 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 73 பேர் பெண்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த சட்டப் பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.