ட்ரம்ப் ஆட்சியின் போது 4 ஆண்டு காலமும் அமெரிக்காவில் தங்க விரும்பாதவர்களுக்கு சொகுசு கப்பல் சுற்றுலா

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி மாதம், ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வில்லி வீ ரெசிடென்சஸ் எனப்படும் நிறுவனம் ஒரு சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணம் ஓராண்டு முதல் 4 ஆண்டு கால அளவைக்கொண்டதாக இருக்கும். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப்பின் ஆட்சியைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இந்த சொகுசுக்கப்பல் சுற்றுலாத் திட்டம் இருக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அவரது ஆட்சி காலத்தில் அமெரிக்க நாட்டில் இருக்காமல், சொகுசுக் கப்பலிலேயே 4 ஆண்டு காலத்தைக் கழிக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் செல்ல 2 பேர் தங்கக்கூடிய அறைகளை ஒருவர் பகிர்ந்து கொள்ள 1,59,999 டாலர்கள் வசூலிக்கப்படும் என்றும்,தனியாக அறை வேண்டுபவருக்கு 2,55,999 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: இந்த சுற்றுலாவின்போது பல வெளிநாடுகளுக்கு சென்று வரும் இனிமையான அனுபவம் கிடைக்கும். ஓராண்டு முதல் 4 ஆண்டு காலத்துக்கு கவலையற்ற மிகவும் சுவையான அனுபவத்தை மக்கள் இதில் பெற முடியும். ஒரே தடவையாக இதில் பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வில்லா வீ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் பேட்டர்சன் கூறும்போது, “இந்தப் பயணமானது அமெரிக்க அதிபர் தேர்தலை பின்னணியாகக் கொண்டது மட்டுமே. மேலும் இதில் பங்கேற்கும் பயணிகளுக்கு தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை வழங்க உள்ளோம். இது அரசியல் நிகழ்ச்சியை ஊக்குவிப்பதற்காக அல்ல.

இந்த சுற்றுலாத் திட்டத்தை, தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக நாங்கள் திட்டமிட்டு விட்டோம். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் நாட்டை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்களுக்கான சரியான திட்டம் எங்களிடம் இருப்பதாக உணர்கிறோம். நாங்கள் மாறுபட்ட அரசியல் பார்வைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். உண்மையான வழியில் உலகை சுற்றிப் பார்ப்பதற்காக தயாரித்த திட்டம்தான் இது” என்றார்.

ஓராண்டு சுற்றுலா திட்டத்துக்கு `எஸ்கேப் ஃபிரம் ரியாலிட்டி’, 2 ஆண்டு திட்டத்துக்கு `மிட்-டெர்ம் செலக் ஷன்’, 3 ஆண்டு திட்டத்துக்கு `எவ்ரிவேர் பட் ஹோம்’, 4 ஆண்டு திட்டத்துக்கு `ஸ்கிப் ஃபார்வேர்ட்’ என்று இந்த சுற்றுலாத் திட்டங்களுக்கு வில்லா வீ நிறுவனம் பெயரிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.