தமிழகத்தில் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்: ஐஎம்ஏ மாநிலத் தலைவர் தகவல்

ஈரோடு: சென்னையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து 24 மணி நேர வேலை நிறுத்தத்தை மருத்துவர்கள் தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எம்.அபுல் ஹசன் புதன்கிழமை ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியது: “சென்னை கிண்டியில் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் சார்பில் இன்று (நவ.13) மாலை 6 மணி முதல் நாளை (நவ.14) மாலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜிக்கு நீதி வேண்டியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஐஎம்ஏ உறுப்பினர்களாக உள்ள 8,000 மருத்துவமனைகளில் பணியாற்றும் 45,000 மருத்துவர்கள் பங்கேற்றுள்ளோம். வேலை நிறுத்தம் காரணமாக, மருத்துவமனைகளில், வெளி நோயாளிகள் மற்றும் அவசரம் இல்லாத சிகிச்சைகள் அளிக்கப்படாது. அவசர சிகிச்சைகள் மற்றும் அவசர அறுவை சிகிச்சை மட்டும் தொடர்ந்து நடைபெறும்.

மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது மருத்துவனைகள் பாதுகாப்புச் சட்டம் எண் 48/ 2000 பிரிவின் கீழ் மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். அதன்மூலம், காவலர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எம்.அபுல் ஹசன்

தனியார் மருத்துவமனைகளை, தமிழக அரசு மருத்துவமனைகள் பதிவுச் சட்டத்தின் மூலம் முழுவதும் மற்றும் நெருக்கடிகள் கொடுப்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்று அபுல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “மருத்துவ சங்கங்கள் அதிகபட்சமாக கேட்ட பாதுகாப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படும். அதுதொடர்பாக மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதன் விவரம்: மருத்துவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு: மருத்துவ சங்கங்களிடம் தமிழக அரசு உறுதி

நடந்தது என்ன? – சென்னை தாம்பரம் அடுத்த புது பெங்களத்தூரை சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் 25 இளைஞர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை பார்த்துவிட்டு, தொற்றுகள் அதிகமாகியுள்ளதாகவும், மேலும் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தாய் வலியால் துடித்து அவதிப்பட்டு வருவதை பார்த்து வேதனை அடைந்த மகன் விக்னேஷ் புதன்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் ஓபி சீட்டு வாங்கி கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் பாலாஜியின் அறைக்கு சென்று, அறையின் கதவை மூடிவிட்டு, எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கேட்டு விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த விக்னேஷ், மறைத்து வைத்திருந்த வீட்டில் இருந்து எடுத்து வந்த காய்கறிகள் வெட்டும் கத்தியால் மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தி குத்தால் பலத்த காயமடைந்த மருத்துவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

மருத்துவமனையில் இருந்து பணியாளர்கள், பொதுமக்கள், அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விக்னேஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்: சென்னை கிண்டி கலைஞர் மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவர் பாலாஜிக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தாலும், நன்றாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறும்போது, “மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபரின் தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களே தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றனர். அவரது தாயின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றிருக்கிறார்.

மருத்துவர் இதய நோயாளி. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இந்த பயங்கர தாக்குதலில் அவருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து துறை நிபுணர்களும் சேர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர் நலமுடன் இருக்கிறார்” என்றார்.

மருத்துவர்களின் போராட்டத்தால் பரபரப்பு: மருத்துவரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கிண்டி கலைஞர் மருத்துவமனையில் ஒன்றாக திரண்டு மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் உறுதியும், எதிர்க்கட்சிகள் கண்டனமும்: “மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து திமுக அரசை கடுமையாக கண்டித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.