தாய்லாந்து: பிறப்புறுப்பில் ஊசி… 18 ஆண்டுகளாக தீராத வலியை அனுபவிக்கும் பெண்

பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் நரத்திவாத் மாகாணத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு பல வருடங்களாக வயிற்றின் அடிப்பகுதியில் வலி இருந்து வந்துள்ளது. இதுபற்றி தி இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்தபோது தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யும் ஊசி ஒன்றை மருத்துவ பணியாளர், பெண்ணின் பிறப்புறுப்பில் தவறுதலாக விட்டு விட்டார்.

பிரசவத்திற்கு பின்பு தையல் போடும்போது நடந்த இந்த சம்பவத்தில், அந்த ஊசியை எடுக்கும் முயற்சியில் டாக்டர் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஊசி இருக்கும் இடம் பற்றி அறிந்து கொள்ள, விரல்களால் தொடர்ந்து முயன்றிருக்கிறார். ஆனால், அதில் பலன் ஏற்படவில்லை. இதனால், ரத்த இழப்பு அதிகரிக்கும் என அச்சமடைந்து, ஊசியை வெளியே எடுக்காமலேயே தையலை போடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் என அந்த செய்தி தெரிவிக்கின்றது.

அந்த பெண்ணுக்கு வயது 36. 18 ஆண்டுகளுக்கு முன் நர்ஸ் ஒருவர் தவறுதலாக, விட்ட அந்த ஊசி அந்த பெண்ணுக்கு தினமும் தீராத வலியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பவினா அறக்கட்டளையை அவர் தொடர்பு கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில், ஊசி இருப்பது உறுதியானது.

இதனால், சாங்கிலா மாகாணத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகும்படி உள்ளூர் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், தொடர்ந்து ஊசி இருக்கும் இடம் மாறி கொண்டே இருந்துள்ளது. இதனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த சூழலில், மாதத்திற்கு 4 முறை தொடர்ந்து மருத்துவமனைக்கு அவர் சென்று வந்துள்ளார். ஏழையாக உள்ள அவருக்கு உதவும் வகையில் பவினா அறக்கட்டளை முன்வந்துள்ளது. அதன் தலைவர் பவீனா ஹாங்சகுல், அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு, தேவையான சிகிச்சையை அந்த பெண் பெறுவதற்கு வேண்டிய உதவிகளை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், ஆன்லைனில் கண்டனங்கள் குவிந்தன. அந்த டாக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 18 ஆண்டு கால வேதனைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சிலர் தெரிவித்தனர். அந்த பெண்ணின் கணவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில், மருத்துவமனை சார்பில் பெண்ணுக்கு இழப்பீடு எதுவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ற விவரங்கள் வெளிவரவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.