திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வனபோஜன உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி இந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை சிறிய கஜவாகனத்தில் மலையப்பர் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுவார். இதுபோல் ஒரு பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியும் ஊர்வலமாக வருவர். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். பிறகு அங்குள்ள பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வன போஜனம் வழங்கப்படும். இந்த உற்சவத்தை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை திருமலையில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
18-ல் கார்த்திகை தீப உற்சவம்: வரும் நவம்பர் 18-ம் தேதி கார்த்திகை தீப உற்சவம் கடைபிடிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் திருப்பதி நகரில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக வளாகத்தில் கார்த்திகை தீப உற்சவம் நடைபெற உள்ளது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், பெண் ஊழியர்கள் பங்கேற்று நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜையில் ஈடுபடுவர். அதேநாளில் திருமலையில் கொடிக்கம்பம் அருகே உள்ள பலி பீடத்தில் பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.