மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மகா யுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கூட்டணியிலும் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை. இச்சூழலில், இரண்டு கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள் முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளனர்.
எனினும், எம்விஏ கூட்டணியில் சிவசேனாவின் (யூபிடி) உத்தவ் தாக்கரேவும், மகா யுதியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும் முதல்வர் வேட்பாளர்கள் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுபோல, தேசியவாத காங்கிரஸின் சரத் பவாரும் எம்விஏ பற்றி ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இதன்மூலம் அடுத்த முதல்வர் யார் என்பதில் அந்த கூட்டணிக்குள் மோதல் நிலவுவது தெரியவந்துள்ளது.
மகா யுதி கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 153 தொகுதியில் போட்டியிடுகிறது. இதனால், தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக விரும்புகிறது. ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எண்ணம் வேறாக உள்ளது. பிஹாரில் அதிக தொகுதிகளில் வெற்றி கிடைத்தும் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரை முதல்வராக்கியது பாஜக. இதேபோல், மஹா யுதி வெற்றி பெற்றால் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என ஷிண்டே எதிர்பார்க்கிறார்.
இதேபோன்ற நிலை எம்விஏவிலும் நிலவுகிறது. முதன்முறையாக மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தன. இதன் காரணமாக, தங்கள் கட்சிக்காக முதல்வர் பதவியை குறி வைக்கிறது காங்கிரஸ். மிரட்டல் அரசியல் செய்தால் தங்களுக்கும் முதல்வர் பதவி கிடைக்கும் என என்சிபி தலைவர் சரத் பவார் கருதுகிறார். இதையே, சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சியின் முதல்வர் நிரந்தரமாக நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2019 பேரவைத் தேர்தலில்.. மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை கோரினார். இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். அஜித் பவார் துணை முதல்வரானார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மூன்று நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து, காங்கிரஸ், சரத் பவாரின் என்சிபி, சிவசேனா கட்சிகள் இணைந்து எம்விஏ கூட்டணியை அமைத்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார். இரண்டரை ஆண்டுக்குப் பிறகு எம்விஏ ஆட்சியும் கவிழ்ந்தது. இதற்கு ஏக்நாத் தலைமையில் சிவசேனா பிரிந்தது காரணமானது. பிறகு ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் முதல்வரானார். பாஜகவின் பட்னாவிஸ் துணை முதல்வரானார். கடந்த 5 ஆண்டுகளில் மகராஷ்டிரா மூன்று முதல்வர்களை சந்தித்தது. இதே நிலை இந்த தேர்தலிலும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.