Mohammed Shami Ranji Trophy News: இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத தோல்வியை தந்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் அதுவும் சொந்த மண்ணில் இழந்திருக்கிறது. இந்த நவம்பரில் இன்னும் பல போட்டிகள் காத்திருக்கின்றன என்றாலும் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி இந்திய அணிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். இதேபோல் தான் கடந்தாண்டு நவம்பரில், அதாவது நவ. 19ஆம் தேதி ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்திய அணி.
இந்திய அணி ரசிகர்கள் நிச்சயம் அந்த தோல்வியில் இருந்தும் இன்னும் மீண்டு வந்திருக்க மாட்டார்கள். இடையே ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றாலும் கூட கடந்தாண்டு நவம்பரில் நடந்த இறுதிப்போட்டி பலராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த தொடர் முழுவதும் இந்திய அணி வரிசையாக வெற்றிகளை குவித்தது. 10 வெற்றிகளை குவித்து, 11 போட்டியில் தோற்று உலகக் கோப்பையை தவறவிட்டது. அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிகரமான செயல்பாட்டுக்கு முக்கியமானவர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி எனலாம். 24 விக்கெட்டுகளை வீழத்தி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையையும் பெற்றார்.
மீண்டு(ம்) வந்தார் முகமது ஷமி
அதுதான் தற்போது வரை முகமது ஷமி விளையாடிய கடைசி சர்வதேச போட்டி எனலாம். அதன்பின் இந்திய அணியிலும் அவர் விளையாடவில்லை, ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. உலகக் கோப்பை தொடரில் இருந்தே காயத்தால் அவதிப்பட்டு வந்தாலும் வலி நிவாரணியை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வந்துவீசி வந்திருக்கிறார். அதன்பின்னர் அந்த காயத்தில் இருந்து தற்போதுதான் முழுமையாக மீண்டுவந்த முதல் தர போட்டியில் விளையாடியிருக்கிறார்.
தற்போது ரஞ்சி கோப்பை 2024-25 தொடரில் இன்றைய நான்காம் ஐந்தாம் சுற்று போட்டியில் வங்காள அணிக்காக முகமது ஷமி களமிறங்கி இருக்கிறார். வங்களாம் – உத்தர பிரதேசம் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று வங்காள அணி முதலில் பேட்டிங் செய்து 228 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக வங்காள அணியின் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது 92 ரன்களை குவித்தார்.
முகமது ஷமி வீசிய 10 ஓவர்கள்
வங்காள அணி ஆல்-அவுட்டான பின்னர் உத்தர பிரதேசம் 30 ஓவர்களுக்கு பேட்டிங் செய்து 1 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 9 விக்கெட்டுகளை கையில் இருக்கும் நிலையில், 125 ரன்கள் பின்னடைவில் உள்ளது. சுப்ரான்ஷூ சேனாபதி 44, ரஜத் பட்டிதார் 41 ரன்களுடன் களத்தில் நிலைத்து நிற்கின்றனர். உத்தர பிரதேசம் சந்தித்த 30 ஓவர்களில் முகமது ஷமி 10 ஓவர்களை வீசி இருக்கிறார். ஆனால் அந்த 10 ஓவர்களில் அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. 34 ரன்களை கொடுத்துள்ளார், அதில் ஒரு ஓவர் மெய்டன் ஆகும்.
புது பந்தில் வித்தைக்காட்டக் கூடியவரான முகமது ஷமி, நீண்ட காலத்திற்கு பின்னர் களத்திற்கு திரும்பியிருந்தாலும் முதல் நாளில் சொதப்பியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நாளைய தினம் அவரே பந்துவீச்சை தொடங்குவார் எனலாம். நிச்சயம் நாளை ஷமி பேட்டர்களை அச்சுறுத்த தொடங்குவார் எனலாம். ஒருவேளை இந்த போட்டியிலோ அல்லது அடுத்த போட்டியிலோ ஷமி தனது உடற்தகுதியை நிரூபித்து, சிறப்பாகவும் செயல்பட்டால் ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய அணியில் இருந்து அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.