சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பாக ஓடி வெற்றிப் பெற்றப்படம் ‘லப்பர் பந்து’. தற்போது ஓடிடி-யிலும் வெளியாகி பாராட்டைப் பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலமே அதன் கதாபாத்திரங்கள்தான். படத்தில் இடம்பெற்ற கெத்து, காத்தாடி, கொளஞ்சி, கருப்பையா, அசோதா என அத்தனை கதாபாத்திரங்களும் கதையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியான முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான அசோதா பாத்திரத்தில் நடித்த ஸ்வாசிகா விஜய், டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில், “தமிழில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கிறேன். இப்போது எனக்குக் கிடைத்த இந்த வரவேற்பு உண்மையில் நான் எதிர்பார்க்காதது. அசோதா போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது உண்மையில் ஒரு வரம். தமிழ் ரசிகர்கள் மட்டும் கொண்டாடி வந்த இந்தக் கதாபாத்திரம், படம் ஓடிடியில் வெளியானதிலிருந்து மலையாள ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். பலதரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றுவருகிறேன். பா.ரஞ்சித், விஜய் சேதுபதி, மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் என ஒவ்வொருவரும் அழைத்து வாழ்த்தினார்கள். புதுமுகமான எனக்கு இதுபோன்ற அன்பான வரவேற்பு உண்மையிலேயே பெரும் நம்பிக்கைதான்.
சினிமாவில் ஒரு நடிகை ட்ராக்டரில் என்ட்ரி ஆகுவதெல்லாம் இதுவரை வராதது என்றே நினைக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேசியதாகவும், பலரும் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க வேண்டுமா என மறுத்துவிட்டதாகவும் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் எனக்கும் அப்படிதான் தோன்றியது. ஒரு கட்டத்தில் “ஹரிஷ் கல்யாண் மாமியாராக நடித்தாரே அவர்தான்…” என முத்திரைக் குத்தப்படுவோம் என்றும் எண்ணினேன். ஆனால் என்னை அசோதா காதாப்பத்திரம் என்னவோ செய்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
எல்லோருக்கும் என் வயது தெரியும். அதனால் ரிஸ்க் எடுக்கத் தயங்கக் கூடாது என தயாராக இருந்தேன். இப்போது என் நடிப்பைதான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனவே, வயதை காரணம் காட்டி எந்த வாய்ப்பையும் இழந்துவிட கூடாது.
காதல் கதாபாத்திரங்களில் ஏற்கெனவே நடித்திருந்ததால், இதில் வரும் காதல் காட்சிகளிலும் இலகுவாக நடித்துவிடலாம் என்றே கருதினேன். ஆனால், இந்தத் திரைப்படம் முழுவதும் எனக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தது. உதாரணமாக, கெத்துக்கு தனியாக உணவு எடுத்து வைக்கும் காட்சியில், நான் ஒவ்வொரு முறையும் சிரித்து, வெட்கப்பட்டு என எதோ ஒரு வகையில் காதலை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தேன்.
ஆனால், இயக்குநர் அப்படி நான் நடிக்கும்போது ‘கட்’ எனக் கூறிவிட்டு, ‘அசோதா கடந்த 25 ஆண்டுகளாக கணவனுக்காக இதைச் செய்துவருகிறாள். அவளுக்கு ஒவ்வொருமுறையும் இப்படி காதலை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அதனால், வழக்கமான ஒன்றாக செய்தாலே போதும்’ என்றார்.
மற்றொரு காட்சியில், கணவனைப் பிரிந்து மீண்டும் அவனை சந்திக்கும் போது ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க வேண்டும் என நானே முடிவு செய்துக்கொண்டேன். ஆனால், இயக்குநர், ‘அசோதா ஒரு குடும்பத்தை வழிநடத்துபவள். அவளுக்கு கதவு திறந்திருப்பதும், அடுத்த அறையில், மாமியார் இருப்பது தெரியும்.
அதனால், அவளின் காதல் முகத்தில்தான் தெரிய வேண்டும்’ என்றார். இப்படி ஒவ்வொரு காட்சியும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தை கற்றுக்கொடுத்தது. அசோதாவிடம் நடிகை கீதா கைலாசம் பேசும் காட்சியில், இயக்குநர், ` ஒரு கண்ணில் மட்டும் கண்ணீர் வரவைக்க முடியுமா என்றார். நானும் முயன்று அப்படியே நடித்துவிட்டேன். ஆனால், எனக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அதனால், இயக்குநரிடம் மறுநாளும் அந்தக் காட்சியை எடுக்கக் கேட்டுக்கொண்டு நடித்துக் கொடுத்தேன். எனக்கு இந்தப் படம் அப்படி உணர்வுப் பூர்வமாக கலந்துவிட்டது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…