விஜய்யின் கடைசி திரைப்படமான `தளபதி 69′ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் சென்னை ஆஃபிஸர்ஸ் அகாடமியில் படப்பிடிப்பு நடத்தியப் பிறகு ராணுவ வீரர்கள் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் கலந்துகொண்டார் விஜய்.
அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வைரலாகின. அ.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதை தாண்டி சில முக்கிய கதாபாத்திரங்களில் பாபி தியோல், ப்ரியாமணி, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் படத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
தளபதி 69 தொடர்பாக கூறிய அவர், “ விஜய்யின் கடைசி திரைப்படமான `தளபதி 69′ படத்தில் எனக்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டிருக்கிறார்கள். என்னுடைய தேதி பிரச்னைகளும் இருக்கிறது. அதனால், அந்த கதாபாத்திரத்தில் உறுதியாக நான் இருப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால், அதை சமாளித்து நடித்துவிடுவேன் என நம்புகிறேன். விஜய் ஒரு சிறந்த நடிகர். அதுமட்டுமல்ல அவர் ஒரு நல்ல மனிதரும்கூட. அவருடைய குறிக்கோளும் அற்புதமாக இருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.
சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் `பாய்ரதி ரணகல்’ திரைப்படம் வருகிற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இவர் நடிப்பில் 2017-ல் வெளியான `மஃப்டி’ திரைப்படத்தின் அடுத்த பாகம்தான் இத்திரைப்படம்.