Zomato Launches Food Rescue Option : இந்தியாவின் உணவு கலாச்சாரம் மாறியதோ இல்லையோ, உணவு வாங்கி சாப்பிடும் முறை மட்டும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. பிடித்த உணவுக்கான பொருட்களை வாங்கி வந்து, வீட்டில் செய்து சாப்பிடுபவர்கள் மிகவும் குறைந்து விட்டனர். பண்டிகை காலங்கள், சாதாரண நாட்கள் என அனைத்து நாட்களிலும் உணவு விநியோகிக்கும் கடைகளும், உணவு ஆர்டர் செய்யும் ஆட்களும், அதற்கான செயலிகளும் பிசியாக இயங்கி வருகின்றன. நொடிப்பொழுதில் தொட்டவுடன் உணவு ஆர்டர் செய்வது எளிதாகி விட்டது. இது, பலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் சென்று முடிந்து விடுகிறது.
ரத்து செய்யப்படும் ஆர்டர்கள்:
உணவு ஆர்டர் செய்யும் பலர், அந்த உணவு தயாராகும் போது, அந்த உணவை ஆர்டர் எடுத்தவர் எடுத்துக்கொண்டு வரும் போது, அதனை ரத்து செய்து விடுகின்றனர். இதனால் அந்த உணவு வீணாவதுடன், அந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு வந்தவரின் உழைப்பும் வீணாகப்போகிறது. இப்படி ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் வீணாவதை தடுக்கவும், அதை தங்களுக்கு லாபகரமாக மாற்றவும் Zomato புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியிருக்கிறது.
Zomato அறிமுகப்படுத்திய சூப்பர் திட்டம்!!
Zomato, தங்களது செயலியில், Food Rescue என்ற புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் லிஸ்ட் செய்யப்படும் உணவுகள், சலுகை விலையில் விற்கப்படுகின்றன. இதன் மூலம், ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் வீணாவதை ஓரளவிற்கு தவிர்க்கலாம் என Zomato நிறுவனம் நம்புகிறாது.
எப்படி வேலை செய்யும்?
பலருக்கு, இந்த ஆப்ஷன் எப்படி வேலை செய்யும் என்பது குறித்த கேள்வி இருக்கிறது. இந்த அம்சம் 3 கிமீ சுற்றளவில் உள்ள வாடிக்கையாளர்கள் ரத்து செய்யப்பட்ட ஆர்டர்களை தள்ளுபடி விலையில் வாங்க அனுமதிக்கிறது. உணவகங்கள், டெலிவரி செய்பவர்களுக்கு மட்டுமன்றி வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கும் உணவகங்களுக்கும் என்ன பயன்?
இந்த Food Rescue ஆப்ஷன், உணவு வீணாவதை தடுப்பது மட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் குறைவான விலையில் அந்த உணவை வாங்கிக்கொள்ளவும் அனுமதிக்கிறது. அது, பலரது பட்ஜெட்டிற்குள்ளும் வருகிறது. உணவகங்கள் மறுவிற்பனை மூலம் உணவின் விற்பனையிலிருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு சதவீதத்தைப் பெறுவதற்கு இந்த ஆப்ஷன் பயனளிக்கிறது. உணவை ரத்து செய்தவர்களுக்கு முழு தொகை திரும்ப கிடைப்பதோடு, அந்த உணவு வேறு ஒருவருக்கு பயணளிப்பதாகவும் இருக்கிறது. எனவே, உணவு தயாரிப்பவரில் இருந்து அதை கேன்சல் செய்பவர் வரை அனைவருக்கும் Food Rescue ஆப்ஷன் பயனளிப்பதாக இருக்கிறது.