Car Sales In October 2024: இந்திய வாகன சந்தையில் இருச்சக்கர வாகனங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தை விட, அக்டோபரில் அதிகமா விற்பனையாகியிருந்தது. அதேபோலவே, கார்களும் இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. தசரா, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் புதிய வாகனங்களை வாங்குவது இந்தியாவில் வழக்கம் என்பதாலும், இந்த நேரத்தில் அதிக ஆப்பர்கள் தள்ளுபடிகள் கிடைப்பதாலும் பைக் மற்றும் கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது.
அதுவும் இந்த பண்டிகை காலத்தில் SUV வகை கார்களுக்கு அதிக டிமாண்ட் இருந்திருக்கிறது. புதிய கார்களும் பெரியளவில் விற்பனையாகியிருப்பதும் தெரிகிறது. இந்திய வாகன சந்தையில் அக்டோபர் மாத கார் விற்பனை விவரங்கள் FADA வெளியிட்டிருக்கிறது. கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 4,83,159 கார்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது இது கடந்தாண்டை விட சுமார் 32.38% அதிகமாகும்.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 3,64,991 கார்களே விற்பனையாகின. இருப்பினும் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில்தான் தீபவாளி பண்டிகை வந்ததும் குறிப்பிடத்தக்கது. வருடாந்திர விற்பனையில் மட்டுமின்றி, மாதாந்திர விற்பனையிலும் கார்கள் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பரில் 2,75,681 கார்கள் விற்பனையான நிலையில், 75.26% மாதாந்திர வளர்ச்சியை அடைந்துள்ளது.
முதலிடத்தில் மாருதி சுசுகி
கார் விற்பனையில் இந்த அக்டோபர் மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் 1,47,762 கார்களை விற்பனை செய்த மாருதி, 2024 அக்டோபரில் 1,99,675 கார்களை விற்பனை செய்து 35.13% வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, கடந்தாண்டை விட 51,913 கார்களை அந்நிறுவனம் அதிகம் விற்றிருக்கிறது. இந்த மாதத்தின் மொத்த கார் விற்பனையில் மாருதி சுசுகியின் பங்கு மட்டும் 41.33% என்பதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் மாதாந்திர அளவிலும் 75.83% வளர்ச்சி கண்டுள்ளது. 2024 செப்டம்பரில் மாருதி 1,13,560 கார்களையே விற்பனை செய்தது.
அடுத்தடுத்த நான்கு இடங்கள்
தொடர்ந்து, ஹூண்டாய், டாடா, மகேந்திரா, கியா ஆகியவை அடுத்தடுத்த நான்கு இடங்களை பிடிக்கின்றன. 2024 அக்டோபரில் ஹூண்டாய் 67,981 கார்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்தாண்டு 52,170 கார்களை விற்ற நிலையில் இந்தாண்டு கூடுதலாக 15,811 கார்களை ஹூண்டாய் விற்றுள்ளது. 2024 செப்டம்பரை விட 30,008 கார்களையும் ஹூண்டாய் அதிகமாக விற்றிருக்கிறது.
2024 அக்டோபரில் டாடா நிறுவனம் மொத்தம் 65,011 கார்களை விற்றிருக்கிறது. அதாவது கடந்தாண்டு அக்டோபரை விட 15,213 கார்களும், 2024 செப்டம்பரை விட 30,004 கார்களும் அதிகமாக விற்றிருக்கிறது. 2024 அக்டோபரில் மகேந்திரா நிறுவனம் 58,120 கார்களை விற்று கடந்தாண்டு அக்டோபரை விட 20,843 கார்களை விற்று மிரட்டி உள்ளது. அதாவது ஏறத்தாழ 55.91% வளர்ச்சி ஆகும். அதேபோல் 2024 செப்டம்பரை விட 26,173 கார்களை மகேந்திரா அதிகம் விற்றிருக்கிறது. 5ஆவது இடத்தில் உள்ள கியா 2024 அக்டோபரில் 28,612 கார்களை விற்றிருக்கிறது. இது கடந்தாண்டு அக்டோபரை விட 6,654 யூனிட்கள், 2024 செப்டம்பரை விட 13,091 யூனிட்கள் அதிகமாகும்.