அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் இடம்பெற்றுவருகின்றன

இன்று (14) நாடு பூராகவும் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வாக்களிப்பானது மிகவும் சுமூகமான முறையில் இடம் பெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் திகாமடுல்ல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்ரம தற்சமயம் ஊடக சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

இன்று காலை 7.00 மணி முதல் 12.30 வரையிலான அம்பாறை மாவட்டத்தில் வாக்குப்பதிவுகளின் நிலவரப்படி 25% சதவீதமான வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை மற்றும் பொத்துவில் அம்பாறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் வாக்காளர்களின் எண்ணிக்கை 555432 ஆகும். மற்றும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 07 ஆகும். மொத்தமாக 64 அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.

2024 ஆண்டு பொதுத்தேர்தல் அறிவித்த பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றதும் அமைதியானதுமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது. பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை. எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப்பெற்றிருந்தன. அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறையற்ற நீதியான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் தெரிவத்தாட்சி அலுவலருமான நானும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டார்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் ஆங்காங்கெ மழை பெய்து வருவதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் நாட்டமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.