India National Cricket Team Latest News Updates: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) விளையாடுவதற்கு இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நவ.10, 11 ஆகிய தேதிகளில் இரு பிரிவுகளாக இந்திய அணி வீரர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகருக்குச் சென்றடைந்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ரோஹித் சர்மா இன்னும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை.
கடந்த செவ்வாய்கிழமை முதல் இந்திய அணி (Team India) வீரர்கள் பெர்த் நகரில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்க மைதானத்தில் (Perth WACA Stadium) பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய ஏ அணியுடன் பிரதான இந்திய அணிக்கு மூன்று நாள் பயிற்சி போட்டி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில் மைய ஆடுகளத்திலேயே வலைப்பயிற்சி செய்துகொள்வதாக இந்திய அணி முடிவெடுத்தது. இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோற்றது.
வேகத்தை சமாளிக்குமா இந்தியா…?
வரும் நவ.22ஆம் தேதி அன்று பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் (Perth Optus Stadium) தொடங்குகிறது. இந்த மைதானத்தில் வழக்கம் போல் நல்ல வேகம் இருக்கும், நல்ல பவுண்ஸ் இருக்கும், விக்கெட் கீப்பருக்கு நல்ல உயரத்தில் பந்துசெல்லும் என பெர்த் ஆடுகளத்தின் காப்பாளர் ஐசக் மெக்டொனால்ட் தெரிவித்திருக்கிறார். தற்போதைய இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் (Team Australia) வேகத்தை சமாளிக்க மாட்டார்கள் என முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்டர் பிராட் ஹாடின் தெரிவித்திருக்கிறார்.
சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 2018-19, 2020-21 என இரண்டு முறை பார்டர் – கவாஸ்கர் தொடரை வென்றிருந்தாலும் இந்த முறை, கோப்பையை தக்கவைக்க இயலாது எனவும் பல முன்னாள் வீரர்கள் ஆருடம் சொல்லி வருகின்றனர். இருப்பினும், இன்னும் சில மூத்த வீரர்கள் இந்திய அணியின் அனுபவத்தின் மீதும், அவர்களின் விடாமுயற்சி மீதும் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர் எனலாம்.
பேட்டிங் ஆலோசகராக சச்சின்…?
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டபிள்யூ.வி. ராமன் (WV Raman) தற்போதைய இந்திய அணி பேட்டிங்கை மேலும் மேருகேற்றுவதற்காக தனித்துவமான யோசனை ஒன்றை பிசிசிஐக்கு வழங்கியிருக்கிறார். இன்று காலை 4 மணியளவில் அவர் தனது X பக்கத்தில்,” ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கு பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை கொண்டு வந்தால், நிச்சயம் இந்திய அணிக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன். தற்போது இருந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வரை போதுமான கால இடைவேளை இருக்கிறது. இதுபோன்ற ஆலோசகர்களை அணிக்குள் கொண்டு வருவது தற்போது ஒரு பொதுவான ஒன்றாக ஆகிவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
I think that #TeamIndia could benefit if they have the services of #Tendulkar as the batting consultant in their prep for the #BGT2025. Enough time between now and the 2nd test. Roping in consultants is rather common these days. Worth a thought? #bcci #Cricket
— WV Raman (@wvraman) November 13, 2024
ஆஸ்திரேலியாவில் சச்சின்…
கிளென் மெக்ராத், பிரட் லீ, ஷேன் வார்னே, டேமியன் ஃபிளமிங் உள்ளிட்ட தரமான ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) ஆஸ்திரேலியாவில் மொத்தம் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதிலும் அதில் 53.20 என்ற சராசரியுடன் 1,089 ரன்களை சச்சிடன் டெண்டுல்கர் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள் அடக்கம். அதிகபட்சமாக 241* ரன்களை அடித்திருக்கிறார்.
இந்திய அணிக்கு ஏன் சச்சின் தேவை…?
இந்திய அணியின் பேட்டிங்கில் காணப்படும் சிற்சில நுட்பமான தவறுகளை சுட்டிக்காட்டி, அதற்கு தீர்வு வழங்க வேண்டிய சூழல் உள்ளது. கௌதம் கம்பீர், அபிஷேக் நாயர் போன்ற பயிற்சியாளர் குழு இருந்தாலும், ஆஸ்திரேலிய சூழலில் சிறப்பாக விளையாடியிருக்கும் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவானை உதவிக்கு அழைப்பது தவறாகவும் பார்க்கப்படாது, அதே நேரத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பெரும் ஊக்கமாகவும் இருக்கும் எனலாம். முரளி விஜய், புஜாரா, ரஹானே, ஹனுமன் விஹாரி போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் இல்லாமல் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் இதுபோன்ற சிறப்பு முன்னெடுப்பும் கைக்கொடுக்கலாம்.
அந்த வகையில், தற்போது டபிள்யூ.வி. ராமன் கொடுத்துள்ள இந்த ஐடியா சிறப்பான ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக விண்ணப்பித்தபோது, டபிள்யூ.வி. ராமனும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக கூறப்பட்டது இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.