புதுடெல்லி: உணவு பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி, கிராமப்புற மக்களின் சராசரி வருமானம் குறைந்துள்ளது போன்றவற்றை சுட்டிக்காட்டி நாட்டின் வளர்ச்சியின்மை குறித்து பிரதமர் மோடியை மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி, கிராமப்புற சராசரி வருமானம் குறித்து பிரதமர் மோடியின் முழக்கங்களையும், நாட்டின் நிலவரத்தையும் ஒப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “நரேந்திர மோடி அவர்களே உங்கள் முழக்கம் மற்றும் கொள்கைகளின் விளைவுகள்..
முழக்கம் – சிறந்த நாட்கள், விளைவு – உணவு பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. பொதுமக்கள் துன்பத்தில் உள்ளனர். ஏழைகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரின் சேமிப்புகள் ஏன் காணாமல் போனது?
முழக்கம் – வளர்ந்த இந்தியா, விளைவு – முன்னெப்போதும் இல்லாத அளவு பணத்தின் மதிப்பு வீழ்ச்சி?
முழக்கம் – அமிர்த காலம், விளைவு – கிராமப்புற மக்களின் தினசரி சராசரி வருமானம் ரூ.100-க்கும் குறைவாக உள்ளது. 11 ஆண்டுகளில் இதுதான் வளர்ச்சி?” என்று குறிப்பிட்டுள்ளார்.