பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (14) காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (14) நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் குறித்த விசேட உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் சட்டமன்றத்திறந்கு 225 பிரதிநிதிகளை நியமிக்கும் மிக முக்கியமான தேர்தலான பொதுத்தேர்தல் நாட்டுக்கு முக்கியமானது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், குறித்த நேரத்தில் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று உங்களது பெறுமதியான வாக்கினைப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்..
நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெறுகின்றன. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு கிடைத்திருந்தால், அதைப் பயன்படுத்துமாறும், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு உங்களிடம் இல்லையென்றாலும், தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்;.
மேலும், சமூக ஊடகங்கள்; மற்றும் பிற ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள், வதந்திகள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரமே நம்புமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.