“ஊடுருவல்காரர்களை ஜார்க்கண்ட்டில் இருந்து துடைத்தெறிவோம்” – அமித் ஷா

கிரிடிஹ் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் துடைத்தெறிப்படுவார்கள். பழங்குடியினரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க சட்டம் இயற்றப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் கிரிடிஹ் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ஜார்கண்ட் நமது நாட்டிலேயே மிகவும் வளமான மாநிலம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஜார்க்கண்ட் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். ஏனென்றால், மத்திய அரசின் திட்டங்களில் ஜேஎம்எம் அரசு ஊழல் செய்துள்ளது.

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைய நீங்கள் வாக்களியுங்கள். நாங்கள் இங்கு பல்வேறு தொழிற்சாலைகளை அமைப்போம். இங்குள்ள இளைஞர்கள் வேலைதேடி வேறு மாநிலங்களுக்கு செல்லத் தேவையிருக்காது.

ஜேஎம்எம் அரசாங்கத்தின் கவனம் ஊடுருவல்காரர்களை மாநிலத்திற்குள் நுழைய அனுமதிப்பதில் மட்டுமே உள்ளது. இந்த ஊடுருவல்காரர்கள் ஜார்கண்ட்டில் நமது பெண்களை இரண்டாவது, மூன்றாவது, நான்காவது திருமணம் செய்து, அவர்களின் நிலங்களை அபகரிக்கின்றனர்.

ஜார்க்கண்டில் ஊடுருவல்காரர்களின் காலம் ஜேஎம்எம் அரசாங்கத்துடன் முடிவடையும். பாஜக ஆட்சியில் ஊடுருவல்காரர்கள் ஜார்க்கண்ட்டில் இருந்து துடைத்தெறியப்படுவார்கள். பழங்குடியின பெண்ணை திருமணம் செய்து பழங்குடியினரின் நிலத்தை அபரித்த ஊடுருவல்காரர்களிடம் இருந்து திரும்பப் பெற நாங்கள் சட்டத்தை கொண்டு வருவோம்.

ஜார்கண்ட் பல ஆண்டுகளாக நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் நக்சலைட்டுகள் செய்துவிட்டார்கள். 10 ஆண்டுகளில் ஜார்கண்ட் மாநிலத்தை நக்சலிசத்தில் இருந்து விடுவிக்க மோடி பாடுபட்டார். 2026க்கு முன் சத்தீஸ்கரில் நக்சலிசத்தை ஒழிப்போம். 2026க்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

ராகுல் காந்தி என்ற விமானம் ஒருமுறைகூட மேலே பறக்கவில்லை. ஆனால், அந்த விமானத்தை பறக்க வைக்க சோனியா காந்தி 20 முறை முயற்சி செய்தார். தற்போது அந்த விமானம் 21வது முறையாக ஏவுவதற்காக ஜார்க்கண்ட்டுக்கு வர உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே சமீபத்தில், ‘எவ்வளவு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு வாக்குறுதிகளை மட்டும் கொடுங்கள்’ என காங்கிரஸுக்கு அறிவுரை வழங்கினார். ஏனெனில், கர்நாடகா, ஹிமாச்சல், தெலங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், ‘மோடியின் உத்தரவாதம்’ கல்லில் எழுதப்பட்டதைப் போன்றது. எத்தகைய வாக்குறுதிகளைக் கொடுத்தாலும் நாங்கள் நிறைவேற்றுவோம்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.