லக்னோ: போராட்டம் நடத்திவரும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, உத்தரப் பிரதேச பொது சேவை ஆணையம் (யுபிபிஎஸ்சி) முக்கிய ஆள்சேர்ப்பு தேர்வை ஒரே நாளில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. மற்ற தேர்வுகளையும் எவ்வாறு ஒரேநாளில் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரயாக்ராஜில் போராட்டம் நடத்திவரும் மாணவர்களின் கோரிக்கைகளை உணர்ந்து, பிஎஸ்சி முதன்மைத் தேர்வு 2024-ஐ ஒரேநாளில் நடத்துவது தொடர்பாக ஒரே நாளில் மாணவர்களிடம் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து தேவையான முடிவுகளை எடுக்குமாறு ஆணையத்திடம் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆர்ஓ/ ஏஆர்ஓ (பிரிலிம்ஸ்) தேர்வு 2023 குறித்து முடிவெடுக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விஷயங்களையும் பரிசீலனை செய்து இந்தக் குழு விரைவில் அதன் அறிக்கையை சமர்பிக்கும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டி, தேர்வர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். ஆர்ஓ/ஏஆர்ஓ தேர்வுகளை ஒரே நாளில் நடத்த உத்தரப் பிரதேச அரசு முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தேர்வர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, நவம்பர் 5-ம் தேதி யுபிபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், மாகாண குடிமை சேவை (பிசிஎஸ்) முதன்மைத் தேர்வு டிசம்பர் 7,8 ஆகிய தேதிகளில் இரண்டு ஷிப்ட்களாகவும், ஆய்வு அதிகாரி / உதவி ஆய்வு அதிகாரி (ஆர்ஓ, ஏஆர்ஓ) தேர்வு டிசம்பர் 22,23 ஆகிய தேதிகளில் மூன்று ஷிப்டுகளாகவும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு ஆணையத்தின் தலைமையிடம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
யுபிபிஎஸ்சி-யின் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஒன்றுகூடிய மாணவர்கள், ‘ஒரே நாள், ஒரே ஷிப்ட்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். தேர்வுகள் பல ஷிப்ட்களில் நடத்தப்படுவதால் தேர்வுத்தாள் கசிவுக்கு வழிவகுக்கும் என்று குற்றம்சாட்டினர். மறுபுறம், பல ஷிப்ட்களில் தேர்வுகள் நடத்தப்படுவது அதன் புனிதத்தை காக்கும் என்று நிலைப்பாட்டை யுபிபிஎஸ்சி கொண்டுள்ளது. தேர்வுகள் பல நாட்கள் மற்றும் ஷிப்டுகளாக நடத்தப்படுவதால் முடிவுகளை மதிப்பிடுவதற்கு ஒரு இயல்புநிலை நடைமுறைபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.