கங்குவா விமர்சனம்: சத்தியத்தைக் காக்கப் போராடும் சூர்யா; ஆனால் இந்தத் திரைக்கதையை யார் காப்பது?

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் ‘பவுன்ட்டி ஹண்டராக’ இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில் இந்திய எல்லைப்பகுதியில் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ரகசிய பரிசோதனையைச் செய்யும் ஆராய்ச்சி கூடத்திலிருந்து தப்பித்து வருகிறான் சிறுவன் ஸெட்டா (Zeta). அவனைப் பிடிக்க ஒரு கும்பல் துரத்துகிறது. இதனிடையே பிரான்சிஸும் ஸெட்டாவும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கதை 1070-ம் ஆண்டுக்குச் செல்கிறது. அங்கே ஐந்தீவில் ஒன்றாக இருக்கும் பெருமாச்சியைக் காத்துவரும் இளவரசனாக இருக்கிறார் கங்குவா (சூர்யா). அந்த தீவை அடைய ரோமானியர்கள் பெரும்படையோடு வருகிறார்கள். அவர்கள் செய்யும் சூழ்ச்சியில் பக்கத்துத் தீவில் இருக்கும் அரத்தி குல அரசன் ருத்திரன் (பாபி தியோல்) கங்குவாவின் பெருமாச்சி மீது படையெடுத்து வருகிறான். இந்த போரில் வெல்வது யார், இரண்டு காலகட்டத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண்பதே `கங்குவா’ படத்தின் கதை.

Kanguva Exclusive

கங்குவா, பிரான்சிஸ் என இரு வேடங்களில் சூர்யா. போர் வீரனாக ஆக்ரோஷம் பொங்கச் சண்டை செய்வது, எதற்கும் அஞ்சா நெஞ்சனாக நிற்பது எனத் தன் உடல்மொழியால் மிரட்டுகிறார். வசன உச்சரிப்பில் நேர்த்தியிருந்தாலும் பல இடங்களில் ஆக்ரோஷமாகக் கத்துவது துருத்தல். பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் நகைச்சுவைக்காக அவர் பேசுகிற வாய்ஸ் மாடுலேஷன் படு செயற்கைத்தனம். கூலாக நடிப்பதாகச் செய்யும் சேட்டைத்தனமும் ரசிக்கும் படியாக இல்லை. மற்றொரு பவுன்ட்டி ஹண்டராக வரும் திஷா பதானி ‘ஒரு லொகேஷன் டிராக்கருக்கு இந்த அக்கப்போரா’ என்று நம் பொறுமையைச் சோதிக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவருக்கு எந்தக் காட்சியும் அமையவில்லை, அவரும் நடிக்கவில்லை.

குழந்தை நட்சத்திரமாக இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேயோனிடம் இன்னும் அதிகமாக வேலை வாங்கியிருக்கலாம். கோபமான காட்சிகளில் நடிக்கச் சற்றே சிரமப்பட்டுள்ளார். கருணாஸ் ஒன்றிரண்டு இடங்களில் வந்தாலும் தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். போஸ் வெங்கட்டும் நரித்தனமான கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். யோகி பாபுவின் நகைச்சுவை சுத்தமாக வேலை செய்யவில்லை என்றால், அவரையும் ஒரு படி தாண்டி கோபத்தை வர வைக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. கே.எஸ்.ரவிக்குமார், கோவை சரளா ஆகியோர் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ் ‘கொஞ்சமாச்சு சிரிக்க வைங்க’ என்று நம்மை அலற வைக்கிறது. கலைராணியும் தன் பங்குக்கு ஓவர் ஆக்டிங் டோஸேஜைப் போட்டுச் செல்கிறார்.

கற்பனைத் தீவு, காடு, மலை, அருவி என ஒரு ரம்மியமான பழங்கால தனி உலகைச் சிறப்பாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி. குறிப்பாக ஒவ்வொரு தீவுக்கும் தனி ஒளியுணர்வு, போர்க் காட்சிகளில் பிரமாண்டம் எனக் கண்களை விரிய வைப்பவருக்கு இணையாக சுப்ரீம் சுந்தரின் அட்டகாசமான சண்டைக்காட்சிகளும் மிரட்டுகின்றன. கலை இயக்குநர் அமரர் மிலனும் தன் பங்குக்கு மண்டை ஓடு தோரணம், யானைத் தந்த தூண், சட்டப்பாறை, ஆராய்ச்சி கூட செட்டப் எனப் பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறார்.

Kanguva Exclusive

வரைகலை தலைவர் ஹரிஹர சுதன் யானை, பாம்பு வருகிற இடங்களில் செலுத்திய உழைப்பை, ஆகாய விமானத்தில் தொங்குகிற இடம், க்ரீன் ஸ்க்ரீன் பயன்படுத்தப்படும் சாதாரண கார் பயணம், முதலை வரும் காட்சிகள் ஆகியவற்றிலும் காட்டியிருக்கலாம். ‘கங்குவா, கங்குவா’ என ரிப்பீட் அடிக்கும் பின்னணி இசை ஒரு சில இடங்களில் வேலை செய்கிறது, பல இடங்களில் காட்சிக்கு எந்தவிதமான தாக்கமும் தராமல் தேமேவென நகர்கிறது. ‘ஆதி நெருப்பே’ பாடல் பழைய அம்மன் பாடல்களை ஞாபகப்படுத்த, ‘தலைவனே’ பாடல் தவிர மற்ற எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை.

படம் தொடங்கியதுமே சயின்ஸ் பிக்சனாக ‘மூளை வளர்ச்சி அதிகரிப்பு’ என்று ஆராய்ச்சி கூடமெல்லாம் காட்டி பில்டப்போடு நகர்கிறது. ஆனால் ஆரம்பித்த வேகத்தில் நகைச்சுவை என்கிற பெயரில் நாயகன் நாயகி அடிக்கும் கூத்துக்கள் ‘அய்யயோ’ என்று பதற வைக்கின்றன. அதிலிருந்து பழங்காலத்துக்குச் செல்லும் கதை, நம்மைச் சற்றே ஆறுதல்படுத்துகிறது. அங்கே டெக்கினிக்களாக ஒவ்வொரு ப்ரேமிலும் இயக்குநர் சிறுத்தை சிவாவின் உழைப்பு தெரிந்தாலும், திரைக்கதை எழுத்து மிகவும் யூகிக்கக்கூடிய சுவாரஸ்யமற்ற புள்ளியை நோக்கி நகர்கிறது. ‘ஆஆஆஆஆ’ என்று ஒருவர் மாற்றி உரையாடும் (கத்தும்) இடங்கள் எல்லாம் நம்மையும் அச்சுறுத்துகின்றன. வசனங்கள் பேசி கொஞ்சம் அமைதியாகிற இடங்கள் புயலுக்குப் பின் அமைதியாக நம்மைச் சற்றே ஆசுவாசப்படுத்துகின்றன. ‘எதிர் கொள்வோம், எதிரி கொல்வோம்’, ‘இது சட்டப் பாறையில்லை, யுத்த பாறை’ என்பதாக வசனங்களும் குபீர் ரகமே!

Kanguva Exclusive

இரண்டாம் பாதியில் போர் தொடங்குகிற இடத்தில் வருகிற பெண்கள் சண்டை இடுகின்ற காட்சி நிமிர வைத்தாலும், மீண்டும் அதே சுவாரஸ்ய வறட்சி தலைவிரித்தாடுகிறது. சிறுவனுக்கும் சூர்யாவுக்கும் இடையே இருக்கிற உறவினை வைத்துக் கட்டப்பட்ட உணர்ச்சிவய கோட்டை பலவீனமாக இருப்பதால், ஒருபக்கம் ரத்தம், மண்டை ஓடு மறுபக்கம் கத்தி, வில், அம்பு என்று எதுவும் மனதில் ஒட்டாமல் விலகிச் செல்கின்றன. அதுவும் சத்தியத்தைக் காக்கப் போராடும் நாயகன் என்பதாக நகர்ந்த கதை, பின்னர் சாதாரண பழிக்குப் பழி கதையாகிப்போனது ‘கங்குவா’வின் நெருப்பை ஊற்றி அணைத்திருக்கிறது. நிகழ்காலம் மற்றும் கடந்தகாலம் இணைகிற புள்ளியும், இரண்டாம் பாகத்துக்காக வலிந்து திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சியும் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் திரையாக்கத்தில் வெற்றிவாகை சூடும் இந்த கங்குவா, திரைக்கதை என்னும் போர்க்களத்தில் வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டு “ஆஆஆ” என்னும் சத்தத்தோடு பின்னோக்கி ஓடியிருக்கிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.