ராணிப்பேட்டை: ஜனவரி 15-ம் தேதிக்குள் பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் முடிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகத்தின் கட்டுமான பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வியாழன்கிழமை (நவ.14) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறும்போது, “பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை பணிகள் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காரணமாக தாமதமானது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனைத்து வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பொங்கல் பண்டிகைக்குள் அனைவருக்கும் வேட்டி சேலை வழங்க பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’’ என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.