ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார், ராஞ்சியில் உள்ள ஏடிஐ வாக்கு மையத்தில் வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்சியுடன் வந்து வாக்களித்தார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
மாலை 5 மணி நிலவரப்படி முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது கடந்த 2019 தேர்தலை விட சற்று அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2019-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது 63.9 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக மீதமுள்ள 38 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது.
வயநாடு இடைத்தேர்தல்: ஜார்க்கண்ட் முதல் கட்டத் தேர்தலுடன், கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கும், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.