புதுடெல்லி: டெல்லியின் மோசமான காற்றின் தரத்துக்கு எதிராக தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை 2 (GRAP II)-ன் கீழ் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தார்.
டெல்லியின் காற்றின் தரம் வியாழக்கிழமையில் கடுமையாக இருந்தது. காலை 9 மணியளவில் காற்றின் தரக்குறியீடு 428 ஆக இருந்தது. முன்னதாக டெல்லியின் காற்றின் தரம் புதன்கிழமை நாட்டிலேயே மிகவும் மோசமானதாக அறிவிக்கப்பட்டது. இந்த சீசனில் முதல் முறையாக டெல்லியின் காற்றின் தரம் கடுமையானதாக மாறியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், “இந்த மோசமான நிலைக்கு காற்று குறைந்ததும், வெப்பநிலை வீழ்ச்சியுமே காரணம். நாளைக்கு நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் GRAP III இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
ஆய்வுகளின் படி டெல்லியின் மாசுவுக்கு சுற்றியுள்ள பகுதிகள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்கின்றன. 30 சதவீத மாசு உள்ளூர் மூலங்களில் இருந்தும், 34 சதவீதம் தேசிய தலைநகர் பகுதியில் இருந்தும் உண்டாகிறது.
காற்றின் தரம் மேலும் மோசமடைவதை தடுக்க GRAP 2 -ன் கீழ் நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்தும். மாசுபாட்டினை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரச்சாரங்களையும் நாங்கள் வலுப்படுத்துவோம்.
தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து செயல்திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை அரசு மறு ஆய்வு செய்யும். மாசின் அளவு மோசமடைவதைத் தடுக்க நடைமுறையில் உள்ள திட்டங்கள் மேம்படுத்தப்படும்.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.