நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் முடிவு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் அந்த நாட்டில் கருத்தடை சிகிச்சை குறித்தும், கருக்கலைப்பு மாத்திரை விற்பனையும் அதிகரித்துள்ளது.
கருத்தரிப்பதை நீண்ட காலம் கட்டுப்படுத்தும் சிகிச்சை முறை மற்றும் நிரந்தர கருத்தடை குறித்த கேள்விகள், சந்தேகங்கள் தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என அமெரிக்க நாட்டு ஊடக நிறுவனங்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு கருத்தடை மற்றும் கருக்கலைப்புக்கு உதவும் மாத்திரை விற்பனையும் அதிகரித்துள்ளது என மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கத்துக்கும் மாறாக அதிகளவில் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி மக்கள் இருப்பு வைத்துக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தேர்தல் முடிவுகள் வெளியான 60 மணி நேரத்தில் இந்த மாத்திரைகளின் விற்பனை, அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 966 சதவீதம் அங்கு அதிகரித்துள்ளது. ஐயுடி சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் மக்கள் கேட்டு வருகின்றனர்.
ட்ரம்ப், தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் கருக்கலைப்பு விதிகளை கடுமையாக்குவார் என தெரிகிறது. இது அவரது தேர்தல் பரப்புரையிலும் முக்கிய இடம் பிடித்தது. அதனால் அவரது வெற்றிக்கு பிறகு மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகே கருக்கலைப்பு சார்ந்து அமெரிக்காவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது என்பது தெரியவரும்.