தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் சுரேஷ். கதிர்வேல் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் குடிபோதையில் அருகிலுள்ள ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு இருந்த பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
பெண்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து சுரேஷை அந்த வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். போலீஸாரிடம் புகார் அளிக்கப் போவதாக அந்த வீட்டிலுள்ள பெண்கள் கூற, “என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நானே போலீஸ், என் மேலயே புகார் கொடுக்கப் போறீங்களா?” எனச் சொல்லி மிரட்டியுள்ளார். மறுநாள் இது குறித்து அந்த குடும்பத்தினர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், தலைமைக் காவலர் சுரேஷ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தன் செயலுக்கு அந்த ஏட்டு மன்னிப்பு கேட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு இந்த புகாரை எடுத்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காவலர் சுரேஷ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து காவலர் சுரேஷ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
சுரேஷ் மீது ஏற்கனவே இது போன்ற பல்வேறு புகார்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. போலீஸாரின் விசாரணையில் சுரேஷ் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டன. அதையடுத்து, தலைமைக் காவலர் சுரேஷ் மீது, சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சுரேஷை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்