சென்னை: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வரும் 26-ம் தேதி திறந்துவைக்கிறார். இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன வழிகாட்டி ரோபா சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரசியலமைப்பு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத், கே.எம்.முன்ஷி உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களின் சிலைகள், ஓவியங்கள்,இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அசல் பிரதி, அரசியலமைப்பு சட்டத்தை விவரிக்கும் சிற்பங்கள், கண்காட்சிகள், ஓவியங்கள், அஞ்சல் தலைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இந்த அருங்காட்சியகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான நவம்பர் 26-ம் தேதி அன்று திறந்துவைக்கிறார்.
இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னை ஐஐடி அதிநவீன வழிகாட்டி ரோபோவை உருவாக்கிஉள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடந்தது. ஐஐடி வடிவமைப்பு பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் வழிகாட்டி ரோபோவை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜிண்டால் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.ராஜ்குமார், டீன் (கல்வி நிர்வாகம்) பத்மநாப ராமானுஜம் மற்றும் ரோபோ வடிவமைப்பு பணியில் ஈடுபட்ட ஐஐடி மற்றும் ஜிண்டால் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் உடனிருந்தனர்.
வழிகாட்டி ரோபோ குறித்து ஐஐடி பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளோம். இது பார்வையாளர்களுக்கு அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுத்துச் சொல்லும். பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்” என்றார்.
ஜிண்டால் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்குமார் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அதன் கூறுகளை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் நோக்கிலும் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். ஆண்டு முழுவதும் இது திறந்திருக்கும்” என்றார்.