2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும் அமைதியின்மைக்குரிய சம்பவங்கள் எதுவும் இதுவரையிலும் பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
தற்போது நடைபெற்றுவருகின்ற பொதுத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
குறிப்பாக மாலை வேளையில் சீரற்ற காலநிலை ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மழையுடனான காலநிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில், அது குறித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தாமதப்படுத்தாது இயன்றளவு விரைவாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறும்; பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், வாக்களித்த பின்னர், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் கூடியிருப்பதைத் தவிர்த்து, வீடுகளுக்குச் சென்று தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்த ஆணைக்குழுவின் தலைவர், குழுக்களாக ஒன்றுகூடல், பேரணிகள் போன்றன சட்டவிரோதமான செயல்களாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர் அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். எனவே, அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவர் மேலும் வலியுறுத்தினார்.