இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பிளடி பெக்கர்’ (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது என்றும், `அந்த தொகையை திரும்பக் கொடுக்கத் தேவையில்லை என்ற ஒப்பந்த முறையிலேயே வியாபாரம் நடந்திருக்கிறது என்றாலும், 5 கோடியை கொடுக்க நெல்சன் முன் வந்துள்ளார்’ என்றும் டிஜிட்டல் உள்ளிட்ட இதர உரிமைகளில் அவருக்கு லாபம் கிடைத்துள்ளது என்றும் ஒரு செய்தி கோடம்பாக்க வட்டாரத்தில் பரவி வருகிறது.
கடந்த தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்ஸ்’, ‘பிளடி பெக்கர்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் ‘பிளடி பெக்கர்’ படத்தை நெல்சன் தயாரித்திருந்தார். நெல்சனின் உதவியாளரான சிவபாலன் முத்துக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். டார்க் காமெடி, த்ரில்லர், எமோஷன், ஆக்ஷன் என பல இடங்களில் கதை பயணிக்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் தான், படம் நஷ்டம் என்றும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, தயாரிப்பாளர் நெல்சன் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத அவர் சொன்னது இனி..
”தகவல் உண்மைதான். இந்த படத்தை எம்.ஜி. (மினிமம் கேரண்டி) அடிப்படையில் தான் வாங்கியிருந்தோம். இந்த முறையில் படத்தை வாங்கினால், தயாரிப்பாளரிடம் நஷ்டத்தை கோர முடியாது. அதைப் போல விநியோகஸ்தர்களுக்கு லாபம் ஏற்பட்டாலும், அதை தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டியதில்லை. இப்படியான முறைதான் எம்.ஜி. முறை. அதன் அடிப்படையிலேயே படத்தை வாங்கினோம்.
படம் வெளியான ஒருசில நாள்களிலெயே படத்தால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்த நெல்சன், எங்களை அழைத்துப் பேசினார். ‘என்னை நம்பித்தான் நீங்க இந்த படத்தை வாங்கினீங்க. அதனால உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் முழுவதையும் திருப்பி தந்துவிடுகிறேன்’ என்றார். இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சில வாரங்கள் படம் ஓடட்டும். அதன்பிறகும் நஷ்டம் என்றால், பாத்துக்கலாம் என்றோம். ஆனால், தயாரிப்பாளர் நெல்சன், தான் சொன்னபடியே நஷ்டத்தை ஈடு செய்தார்.
100 சதவிகிதம் அவர் திருப்பி கொடுக்க ரெடியாக இருந்தாலும், அவ்வளவு வேண்டாம். 85 சதவிகிதம் போதும் என்று சொல்லவே, அவரும் சம்மதித்தார். கிட்டத்தட்ட 6 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். தன்னை நம்பி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தன்னால் நஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் அவரை போன்றவர்களால் தான் தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது.” என்று நெகிழ்ந்தார் அந்த விநியோகஸ்தர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…