IPL Mock Auction: அஸ்வினின் ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப் 6 வீரர்கள் – அவர் எந்த அணி தெரியுமா?

Ravichandran Ashwin, IPL Mock Auction: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்காக பெர்த் நகரில் பயிற்சியில் இருக்கிறார். இருப்பினும், இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்னரே அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலுக்கு ஒரு மாதிரி ஐபிஎல் 2025 மெகா ஏலம் (Mock Auction) நிகழ்ச்சியில் நடத்தியிருக்கிறார். இந்த மாதிரி ஏலத்தின் (Mock Auction) நிகழ்ச்சியை மொத்தம் 6 எபிசோட்களாக வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில், முக்கிய 20 வீரர்களை (Marquee Players) ஏலம் விட்ட எபிசோட் இன்று மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பட்டது. அதாவது, இந்த மாதிரி ஏலத்தில் 10 அணிகளின் சார்பிலும் தலா 3 பேர் இடம்பெற்றிருந்தனர். அஸ்வின் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 30 பேர் இந்த நிகழ்ச்சியில் ஏலம் எடுப்பவர்களாக பங்கேற்றனர். குறிப்பாக, வாஷிங்டன் சுந்தரின் சகோதரி ஷைலஜா சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காகவும், ராஜஸ்தான் அணியின் உடற்பயிற்சி ஆலோசகர் ராஜாமணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அஸ்வின் ஏலம் விடுபவர்களாக செயல்பட்டார். 

20 முக்கிய வீரர்கள் யார் யார்?

இன்றைய எபிசோடில் டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார், ஃபாப் டூ பிளெசிஸ், ஜாஸ் பட்லர், ககிசோ ரபாடா, கேஎல் ராகுல், மேக்ஸ்வெல், சஹார், மில்லர், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்டார்க், குவின்டன் டி காக், அஸ்வின், ரிஷப் பண்ட், ஸ்டாய்னிஸ், போல்ட், ஷமி, சிராஜ், சஹால் உள்ளிட்ட வீரர்கள் இன்று ஏலம் விடப்பட்டார்கள்.

இவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் ஒவ்வொருவரையும் நிஜ ஏலத்தை போன்று ரேண்டமாக அஸ்வினே தேர்வு செய்து ஏலம்விட்டார். நிஜ ஏலத்திலும் இதே வீரர்கள்தான் Marquee Players ஆக இருப்பார்கள் என்றில்லை. ஐபிஎல் நிர்வாகம் Marquee Players பட்டியலை அணிகளுடனான ஆலோசனைக்கு பின் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் விலை போன டாப் 6 வீரர்கள் 

ரிஷப் பண்ட்: இந்த 20 வீரர்களில் ஒரே ஒரு வீரர் மட்டுமே ரூ.20 கோடி தாண்டினார். ஆம், அனைவரும் எதிர்பார்த்திருப்பது போல் பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்தவர்கள் ரிஷப் பண்டை (Rishabh Pant) ரூ.20.5 கோடிக்கு எடுத்தனர். அந்த அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சரியான தேர்வாகவே பார்க்கப்படுகிறது.

கேஎல் ராகுல்: அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் (KL Rahul) ரூ.18 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் எடுக்கப்பட்டது. ஆர்சிபி அவரை எடுக்க முழு முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி தங்களிடம் கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்டர் இல்லை என்பதால் ராகுலை எடுத்திருக்கிறது. லக்னோ தரப்பு RTM பயன்படுத்தவில்லை.

ஜாஸ் பட்லர்: இவருக்கு அடுத்து இங்கிலாந்து பேட்டர் ஜாஸ் பட்லரை (Jos Butler) குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.16 கோடிக்கு எடுத்திருக்கிறது. வெளிநாட்டு வீரர்களில் அவர்களிடம் ரஷித் கான் மட்டுமே இருக்கிறார் என்பதால் ஜாஸ் பட்லரை அதிக தொகை வரை சென்று எடுத்துள்ளனர். இந்த குஜராத் அணி தரப்பில் தொகுப்பாளர் சஸ்டிகா ராஜேந்திரன், யூ-ட்யூபர் கிரிக்கானந்தா உள்ளிட்டோர் இருந்தனர்.

மிட்செல் ஸ்டார்க்: கடந்த மெகா ஏலத்தில் ரூ.24.75 கோடிக்கு சென்ற மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) இந்த மாதிரி ஏலத்தில் ரூ.14 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். பும்ரா, ஸ்டார்க் ஆகியோர் சேர்ந்து வான்கடேவில் பந்துவீசினால் அது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. இது நிஜ ஏலத்திலும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

அர்ஷ்தீப் சிங் மற்றும் டிரன்ட் போல்ட்: அதே நேரத்தில், அர்ஷ்தீப் சிங்கை (Arshdeep Singh) பஞ்சாப் கிங்ஸ் அணி RTM பயன்படுத்தியும், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட்டை (Trent Boult) ஆர்சிபி அணியும் தலா ரூ.13.5 கோடிக்கு தூக்கி உள்ளது. 

மற்ற வீரர்களின் தொகை எவ்வளவு?

மேலும் அஸ்வின் (Ravichandran Ashwin) தன்னை தானே ஏலம் விட்டுக்கொண்ட நிலையில், அவரை சிஎஸ்கே ரூ.8.5 கோடிக்கு தூக்கியது. நிஜத்திலும் இது நடக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், ரூ.8.5 கோடி கொஞ்சம் அதிகம்தான் எனவும் சிலர் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கின்றனர்.  

டேவிட் வார்னர் – ரூ. 5 கோடி (RCB), புவனேஷ்வர் குமார் – ரூ.7 கோடி (SRH), ஃபாப் டூ பிளெசிஸ் – ரூ.5.5 கோடி (PBKS), ககிசோ ரபாடா – ரூ.10 கோடி (PBKS – RTM), மேக்ஸ்வெல் – ரூ.9.5 கோடி (PBKS), சஹார் – ரூ.5.5 கோடி (RCB), மில்லர் – ரூ.8 கோடி (LSG), ஷ்ரேயாஸ் ஐயர் – ரூ.9.5 கோடி (CSK), குவின்டன் டி காக் – ரூ.8 கோடி (DC), மார்கஸ் ஸ்டாய்னிஸ் – ரூ.12 கோடி (LSG – RTM), முகமது ஷமி – ரூ.12 கோடி (GT – RTM), சிராஜ் – ரூ.11.5 கோடி (RR), சஹால் – ரூ.11 கோடி (PBKS) 

இந்த மாதிரி ஏலம் (Mock Auction) நடைமுறை சமூக வலைதளங்களில் பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது என்றாலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒருவரே, அதுவும் ஏலத்தில் பெயர் இருக்கும் ஒரு வீரரே இதுபோன்று மாதிரி ஏலத்தை நடத்துவது இதுவே முதல்முறையாக இருக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.