கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது. உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 62%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தனர். தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பதவியேற்றார். அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசாநாயக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் முடிவுகள் தற்போது தெரியத் தொடங்கியுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 62%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. நேற்று தேர்தல் குறித்து பேட்டியளித்த திசநாயக்க, ‘தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறுவது உறுதி’ என நம்பிக்கை தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.