கிண்டி : `விக்னேஷின் இறப்பிற்கு டாக்டர்கள்தான் காரணம்' – குடும்பத்தினர் வேதனை

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். தி.மு.க அமைச்சர்கள் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஆய்வு செய்திருந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் மருத்துவர் பாலாஜி அலட்சியமாகச் சிகிச்சை அளித்ததாகவும், மன உளைச்சல் தரும் விதத்தில் பேசியதாகவும், அதனால் கோபமான தன் மகன் விக்னேஷ்வரன் ஆத்திரத்தில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியதாகவும் விக்னேஸ்வரனின் தாயார் பேட்டியளித்தார். மறுபக்கம், மருத்துவர் பாலாஜிக்கு நடந்த சோகத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்டி: விக்னேஷின் குடும்பத்தினர்

இந்நிலையில் இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் அதே கிண்டி கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் வயிற்று வலியால் சேர்க்கப்பட்ட விக்னேஷ் என்ற நபர் உயிரிழந்திருக்கும் சம்பவம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விக்னேஷ் மருத்துவமனையில் இரண்டு நாள்களாக அனுமதித்து இருந்தும் எந்த ஒரு சிகிக்சையும் கொடுக்கவில்லை என்றும், மருத்துவர்கள் விக்னேஷை வந்து பரிசோதிக்கவில்லை என்றும் உயிரிழந்த விக்னேஷின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, மருத்துவர் பாலாஜிக்கு நடந்த சோகத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் விக்னேஷை பரிசோதிக்க தவறிவிட்டதாகவும், இரவில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் வேதனையுடன் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பலர் அலட்சியமாக நடந்துகொள்வதாக மக்களிடையே விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்திருக்கும் உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்தைச் சேர்ந்த பாலய்யா, “நான் விக்னேஷின் மாமா. பித்தப்பை கல் அடைப்புக் காரணமாக விக்னேஷை கிண்டி கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருந்தோம். அப்போது விக்னேஷ் நார்மலாகத்தான் இருந்தார். அப்போது அங்கு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர்தான் இருந்தார். அவர் விக்னேஷை பரிசோதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து நார்மல் வார்ட்டுக்கு மாற்றினார். அதன் பிறகு எந்த டாக்டரும் விக்னேஷை வந்து பார்க்கவில்லை. விக்னேஷ் இறந்ததற்கு முக்கியக் காரணம் டாக்டர்கள்தான்.

இதே ஹாஸ்பிட்டலில் கத்திக் குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டரை எவ்வளவு டாக்டர்கள் சேர்ந்து கவனமாகப் பார்த்து காப்பாற்றினார்கள். அந்த அக்கறையும், கவனமும் பொதுமக்களிடம் காட்டமாட்டார்களா? விக்னேஷின் இறப்பிற்கு டாக்டர்களின் அலட்சியமும், கவனக்குறைவும்தான் காரணம்” என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.