புதுடெல்லி: 3 மாதங்களுக்கு மேலான குழந்தையை தத்தெடுக்கும் பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்படுவதற்கான காரணம் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசை, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்களுக்கு மட்டுமே 12 வார காலத்திற்கான மகப்பேறு விடுப்பு பலன்களைப் பெற உரிமை உண்டு என இருக்கும் மகப்பேறு நலச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின்போது, “குழந்தைகளின் வயதை மூன்று மாதங்கள் என நிர்ணயித்திருப்பதற்கான நியாயமான காரணம் எதுவும் இல்லை. ஒரு பெண் மூன்று மாதங்களுக்கும் மேலான குழந்தையை தத்தெடுத்தால், சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு மகப்பேறு விடுப்பு நன்மைக்கும் அவர் தகுதியற்றவராகிறார். மூன்று மாத காலம் என்ற முடிவை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு தனது பதிலைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால், விசாரணையின் போது, பரிசீலிக்க வேண்டிய பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், இன்று விவாதிக்கப்பட்ட பிரச்சினைக்கு, இன்னும் குறிப்பாக மூன்று மாதங்களுக்கும் குறைவான குழந்தையைத் தத்தெடுக்கும் பெண் மட்டும் தான் சலுகையைப் பெற உரிமை உண்டு என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு மேலும் ஒரு பதிலைத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யப்பட வேண்டிய பதிலின் நகலை மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும். இந்த வழக்கை டிசம்பர் 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.