தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சனி, ஞாயிறு சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த அக்.29ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், நவ.16,17 மற்றும் 23,24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

குறிப்பாக புதிய வாக்காளர் சேர்க்க படிவம் 6, வெளி்நாட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6 ஏ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்றுரைக்க 6 பி, வாக்காளர் பட்டியில் பெயர் சேர்ப்பதை ஆட்சேபிக்கவும், ஏற்கெனவே உள்ள பெயரை நீக்குவதற்காகவும் படிவம் 7, குடியிருப்பை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்கு உள்ளேயே மாற்றினாலோ, நடப்பு வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கான, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான, மாற்றுத் திறனாளிகளை குறிப்பதற்கு விண்ணப்பிக்க படிவம் 8 ஐயும் வழங்க வேண்டும்” என்று அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பின்படி, இரு தினங்களில் தமிழகத்தில் உள்ள 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.