மெஹார்மா (ஜார்க்கண்ட்): பெரும் பணக்காரர்களின் கைப்பாவையாகவும், அவர்கள் சொல்வதை செய்யக்கூடியவராகவும் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட்டின் மெஹார்மாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே சித்தாந்தப் போர் உள்ளது. காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணியும் அரசியலமைப்பை காப்பாற்ற பாடுபடுகின்றன. ஆனால், அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயல்கின்றன.
நான் காட்டும் அரசியலமைப்பு புத்தக அட்டையின் நிறத்தை குறைகூறுகிறார்கள். இந்தப் புத்தகத்தின் நிறம் முக்கியமல்ல, அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதுதான் முக்கியம். அரசியல் சாசனத்தை படித்திருந்தால் அவர்கள் மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பியிருக்க மாட்டார்கள். எல்லோரையும் ஒருவரோடு ஒருவர் சண்டையிடச் செய்திருக்க மாட்டார்கள்.
நமது அரசியலமைப்பு வெற்று புத்தகம் அல்ல. அதில், இந்தியாவின் ஆன்மா உள்ளது. நாட்டின் வரலாறு உள்ளது. அது தலித்துகளை மதிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் பங்கேற்பு அதில் உள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கனவுகள் அதில் உள்ளன. எனினும், பாஜகவையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் சேர்ந்தவர்கள் அதனை அழிக்க விரும்புகிறார்கள். ஆனால், உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது.
அம்பேத்கர், பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே ஆகியோரின் சிந்தனைகளை நமது அரசியலமைப்பு பிரதிபலிக்கிறது. நீர், காடு, நிலம் ஆகியவற்றில் இன்று உங்களுக்கு உள்ள உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து வந்தவை.
நரேந்திர மோடி பெரும் பணக்காரர்களின் கைப்பாவை. அவர்கள் சொல்வதையே நரேந்திர மோடி செய்கிறார். ஏழைகளின் பணத்தைப் பறித்து, பெரும் பணக்காரர்களின் ரூ. 16 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்துள்ளார்.
ஜார்க்கண்டில், பாஜக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 27% லிருந்து 14% ஆக குறைத்தது. ஒருபுறம், நரேந்திர மோடி, நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என கூறுகிறார். மறுபுறம், அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டைக் குறைக்கிறார்கள், உங்கள் நிலத்தைப் பறிக்கிறார்கள், பணமதிப்பிழப்பு மூலம் உங்களை வேலையில்லாமல் ஆக்குகிறார்கள். ஜார்கண்டில் இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எஸ்டி இட ஒதுக்கீடு 28% ஆக இருக்கும், SC இட ஒதுக்கீடு 12% ஆக இருக்கும், OBC இட ஒதுக்கீடு 27% ஆக இருக்கும்.
பெண்களுக்கான கவுரவத் தொகையாக மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். காஸ் சிலிண்டர் விலை ரூ.450 என நிர்ணயம் செய்யப்படும். 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ரூ.15 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். அனைத்து தொகுதிகளிலும் கல்லூரிகள் கட்டப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொறியியல்-மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 3,200 ஆக உயர்த்தப்படும். மற்ற விவசாயப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 50% அதிகரிக்கப்படும்” என தெரிவித்தார்.